பந்திங், டிச.17-
பேரங்காடியில் மாதுவிற்கு தெரியாமல் அவரின் பின்புறம் மிக லாவகமாக அமர்ந்து, ஆடையின் கீழ் வீடியோ படம் எடுத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜாலான் பந்திங்- கிள்ளான் சாலையில் ஜென்ஜாரோமில் உள்ள பசாராயா ஒன்றில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி காலை 10.36 மணியளவில் நிகழ்ந்த இந்த மானப்பங்கச்செயல் குறித்து பாதிக்கப்பட்ட மாது, போலீசில் அளித்த புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பேரங்காடி மையத்தின் ஊழியர் என்று நம்பப்படும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை போலீஸ் தேடி வருவதாக Kuala Langat மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அக்மால்ரிஸா ராட்ஷி தெரிவித்தார்.
பேரங்காடியில் பொருட்களை பார்த்துக்கொண்டு இருந்த அந்த மாது, தன் ஆடையில் யாரோ உரசுவது போல் உணர்ந்த அடுத்த கணமே திரும்பிப்பார்த்த போது, பின்னால் அமர்ந்திருந்த அந்த ஆடவர் மின்னல் வேகத்தில் தன்னை சுதாகரித்துக்கொண்டார்.
அந்த இளைஞரின் செயலை, சந்தேகித்த அந்த மாது, பேரங்காடியில் புகார் அளித்து, சி.சி.டி.வி. கேமராவை பரிசோதனை செய்த போது, அந்த இளைஞரின் வக்கிரச்செயல் அம்பலமானதாக அக்மால்ரிஸா ராட்ஷி குறிப்பிட்டார்.
பேரங்காடியிலிருந்து தலைமறைவாகி விட்ட அந்த இளைஞரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.