கோலாலம்பூர், டிச. 17-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று மூன்று அமைச்சர்கள் பொய்யுரைக்கின்றனர் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
பத்து பூத்தே தீவு, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேமுறையீடு செய்ய வேண்டாம் என்று கூறி, அந்த மேல்முறையீட்டை மலேசியா மீண்டுக்கொண்டதில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று அந்த மூன்று அமைச்சர்களும் நா கூசாமல் பொய்யுரைக்கின்றனர் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இது போன்று பொய்யுரைக்கும் அமைச்சர்கள் தம்முடன் இருந்தார்கள் என்று நினைக்கும் போது தமக்கே வெட்கமாக இருக்கிறது என்று துன் மகாதீர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான கூட்டக்குறிப்பு அம்பலமாகியிருப்பது மூலம் அந்த மூன்று அமைச்சர்களும் பொய்யுரைக்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் துணைப்பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், போக்குவரத்து அமைச்சராக இருந்த அந்தோணி லோக் மற்றும் தற்காப்பு அமைச்சராக இருந்த முகமட் சாபு ஆகியோரை மேற்கோள்காட்டி, துன் மகாதீர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.