தங்கக்கட்டிகளை களவாடியதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், டிச. 17-


கடந்த மாதம் வங்காளதேச ஆடவர் ஒருவரிடம் ஒரு கும்பலாக சேர்ந்து தங்க கட்டிகளை கொள்ளையடித்ததாக போலீஸ்காரர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

காப்பரல் முகமட் அரிப் மார்ஹலிம் என்ற 40 வயதுடைய அந்த போலீஸ்காரர் இன்று நீதிபதி இஸ்ராலிசம் சனூசி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பின்னிரவு 12.25 மணியளவில் கோலாலம்பூர், டாங் வாங்கி, ஜாலான் புடுவில் ரோபின் மியா என்ற அந்த வங்காளதேசியை மடக்கி, கொள்ளையடித்ததாக அந்த போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

வங்காளதேசியிடமிருந்து 5 லட்சத்து 80 ஆயிரத்து 345 ரிங்கிட் மதிப்புள்ள 1,499.81 கிராம் எடைகொண்ட தங்கக்கட்டி, 7 ஆயிரம் வெள்ளி ரொக்கம், ரெட்மி நோட் 13 ரகத்தைச் சேர்ந்த கைப்பேசி உட்பட அந்த வெளிநாட்டு ஆடவரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்த ஆபரணங்களை கொள்ளையடித்ததாக அந்த போலீஸ்காருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்ண்டனை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS