கோலாலம்பூர், டிச. 17-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அரச மலேசிய கடற்படையில் இணைந்த ஒரு வாரத்திலேயே தங்கள் மகன் இறந்தது தொடர்பில், அவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று அடையாளம் கூறப்பட்ட அரச மலேசிய கடற்படை அதிகாரிகள் உட்பட 11 பேருக்கு எதிராக இழப்பீடு கோரி, அந்த கடற்படையினரின் குடும்பத்தினர் தொடுத்த வழக்கில் தோல்விக் கண்டனர்.
காலஞ்சென்ற சூசை மாணிக்கத்தின் தந்தை எஸ். ஜோசப் தொடுத்திருந்த வழக்கு மனுவை நீதிமன்றம் 10 ஆயிரம் வெள்ளி செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்து விட்டதாக சூசை மாணிக்கம் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லத்திபா கோயா தெரிவித்தார்.
இவ்வழக்கில் வாதிகள் மற்றும் பிரதிவாதிகள் ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில், அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த 11 பேருக்கு எதிராக சூசை மாணிக்கம் குடும்பத்தினர் செய்த வழக்குமனுவை தள்ளுபடி செய்வதில் மனநிறைவு கொள்வதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் என்று லத்திபா கோயா தெரிவித்தார்.
இந்த சிவில் வழக்கில் சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினர் வழக்கு செலவுத்தொகையாக பத்தாயிரம் வெள்ளியை பிரதிவாதிகளுக்கு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக லத்திபா கோயா விளக்கினார்.
இதன் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக லத்திபா கோயா தெரிவித்தார்.
27 வயது சூசை மாணிக்கத்தின் மரணம் ஒரு கொலை என்று ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, சூசை மாணிக்கத்தின் குடும்பத்தினர், மேல்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.