புத்ராஜெயா, டிச. 17-
இந்து சமயம் உட்பட இஸ்லாம் அல்லாத சமயத்தவர்களையும், அவர்களின் சமய நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் கடுமையாக விமர்சித்து,வியாக்கியாணம் செய்து காணொளிகளை வெளியிட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சமயப் போதர்களான முகமட் ஸம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடுப்பதில் சமூக ஆர்வலர் எஸ். சசிகுமார் இன்று தோல்விக் கண்டார்.
உலகளாவிய மனித உரிமை அமைப்பின் தலைவருமான சசிக்குமார் செய்து கொண்ட மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக புத்ரா அப்பீல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இரண்டு சமயப் போதகர்களான முகமட் ஸம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்கு தொடுக்க முடியாது, அதற்கான தகுதிபாடுயில்லை என்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், விசாரணை நீதிபதி எந்த இடத்தில் தவறு இழைத்துள்ளார் என்பதை தனது மேல்முறையீட்டு மனுவில் சசிகுமார் மிகத் துள்ளியாக குறிப்பிட வில்லை என்று அப்பீல் நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் அந்த இரண்டு சமயப் போதகர்களுக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சசிகுமார் தொடுத்த பூர்வாங்க வழக்கு விசாரணையை தொடர்வதில்லை என்று மாஜிஸ்திரேட் அளித்த தீர்ப்பு மிகச்சரியானதாகும் என்பதுடன் அதனை சர்ச்சை செய்வதற்கும் இடமில்லை என்பதையும் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸையிடி இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அளித்த தீர்ப்பில் ஊனம் இருப்பதாக தங்களால் கண்டறிய முடியவில்லை என்பதால் சசிகுமாரின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக நீதிபதி டத்தோ ஸையிடி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.