டிச. 17-
இந்திய சமுதாயத்தின் உயர்வுக்கு குறிப்பாக பி40 பிரிவின் வாழ்க்கை உயர்வுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் பல்வேறு சிறப்புத்திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது.
இந்த சிறப்புத்திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்பதற்காக 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் இந்திய சமுதாயத்திற்காக மித்ராவிற்கு 100 மில்லியன் ரிங்கிட்டும் தெக்குன் கடன் உதவித் திட்டத்திற்கு 30 மில்லியன் ரிங்கிட்டும் என மொத்தம் 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடுகள் யாவும் இந்திய சமுதாயத்தை சென்றடையும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. காரணம், 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் மேன்மைக்காக மித்ராவிற்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட், வரலாற்றில் முதல் முறையாக 100 விழுக்காடு எந்தவிதச் சேதாரமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்திய சமுதாயத்தின் சமூகப்பொருளாதாரத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஆகியவையும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் தொழில்முனைவோர் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை மிக ஆக்கப்பூர்வமான முறையில் சமுதாயத்தன் அடித்தட்டு மக்கள் வரை குறிப்பாக அவர்களை தொழில் முனைவர்களாக உருவாக்குவதில் பெரும் பங்காற்றி வருகின்றன..
இந்திய சமுதாயத்திற்கு ஓர் ஒளிமயமான வெற்றியைப் பதிவு செய்வதை இலக்காக கொண்டு டத்தோஸ்ரீ ஆர். ரமணனை துணை அமைச்சராக கொண்டுள்ள தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் ( KUSKOP ) வாயிலாக தொழில்முனைவோர் உதவித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய சமுதாயத்திற்காக இதுவரையில் 7 திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத்துறை அமைச்சின் ( KUSKOP ) தெக்குன் நேஷனல், அமானா இக்தியார் மலேசியா, SME Corp. Malaysia ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் முதன்மையானது, ஸ்பூமி கோஸ் பிக் ( Spumi Goes Big ) திட்டத்தை சொல்லலாம். இத்திட்டத்திற்காக 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அமானா இக்தியார் வாயிலாக பெண் ( PENN ) திட்டத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேங்க் ராக்யாட் இந்தியத் தொழில்முனைவோர் நிதி அளிப்புத்திட்டமான BRIEF –I க்கு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய சிறு வணிக உத்வேகத் திட்டடமான i- BAP- பிற்கு 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்தியப் பெண்களுக்கான தொழில் முனைவோர் பெண் திட்டத்தில் அமானா இக்தியார் மலேசியாவின் Sahabat Usahawan AIM வாயிலாக கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 2,644 இந்தியப் பெண்கள் பயன்பெற்றுள்ளதாக KUSKOP துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ளார்.
6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை கொண்ட i- BAP- திட்டத்தில் 2020 நவம்பர் 27 ஆம் தேதி முதல் கட்டமாக இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த சிறு நிறுவனங்களின் 20 வளரும் தொழில் முனைவர்களுக்கு மொத்தம் 1.5 மில்லியன் ரிங்கிட்டை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் பகிர்ந்து அளித்துள்ளார்.
Business Accelerator Programme for Indian Small Business என்ற i- BAP- திட்டம், KUSKOP அமைச்சின் SME Corp. Malaysia மூலமாக அமல்படுத்தப்பட்டதாகும்.
70 க்கும் மேற்பட்ட இந்திய சிறு வணிகர்களை இலக்காக கொண்ட என்ற i- BAP- திட்டமானது, இந்திய தொழில்முனைவோருக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்து இருக்கும் மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. அதுமட்டுமின்றி இந்திய சமூகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தின் உறுதிப்பாடு இது காட்டுகிறது.
இந்த i- BAP திட்டம், தகுதி வாய்ந்த மற்றும் தொழில்துறையில் முன்னேறுவதற்கு போதுமான உபகரணங்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டு இருக்கும் சிறுவணிகர்களுக்கு கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி வரை அவர்களுக்கு நிதி உதவி வழங்கி, அவர்களை வியாபாரத்தில் கரைசேர்ப்பதற்கு உதவி வருகிறது.
இந்த i- BAP- நிதி உதவி, தங்களின் வர்த்தகத்திற்கு தேவையான உபகரணங்களை அவர்கள் வாங்கிக்கொள்ள முடியும். இந்த உதவிகள் வாயிலாக தங்களின் விற்பனை மற்றும் லாபத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதுடன் உற்பத்தி திறனை மேம்படுத்திக்கொள்ள பெரும் துணையாக இருக்கும் என்று நிதி உதவிப்பெற்றவர்கள் கூறுகின்றனர்.

கண்ணன் சின்னப்பன், பத்து ஆராங்
சிலாங்கூர், பத்து ஆராங்கில் Kasidina Hardware கடையை நடத்தி வரும் கண்ணன் சின்னப்பன் கூறுகையில், இந்திய சமுதாயத்தின் சிறுவணிகர்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள i- BAP- நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த இரண்டு வாரத்திலேயே உரிய அங்கீகாரம் கிடைத்ததாக குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பம் செய்த தங்களுக்கு SME Corp. Malaysia உரிய வழிகாட்டலை வழங்கியதன் பேரில் எங்களின் ஹார்ட்வேர் கடைக்கு தேவையான சாதனங்களை வாங்கி, கடையை மேலும் விரிவுப்படுத்திக்கொள்ள மடானி அரசாங்கம் தங்களுக்கு உதவியிருப்பதாக கண்ணன் சின்னப்பன் கூறுகிறார்.

சந்திரசேகரன் கோபால், சைபர் ஜெயா
சைபர்ஜெயாவில் கேஃபே நடத்தி வரும் TRS Chan Management & Consultancy நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகரன் கோபால் கூறுகையில் நிறுவனத்தின் வர்த்தகத்தை விளம்பரப்படுத்துவதற்கு குறிப்பாக பேனர்கள் செய்வதற்கு நிதி உதவிக் கேட்டு விண்ணப்பித்ததாகவும், ஒரு சிறுவர்த்தகத்திற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் உரிமங்கள் அனைத்தும் தமக்கு இருந்ததால் 14 நாட்களிலேயே தனது விண்ணப்பம் அங்கீகரிக்கப்ட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.
SME Corp. Malaysia மூலமாக 20 ஆயிரம் வெள்ளி நிதி உதவி கிடைத்துள்ளது. இந்த தொகையை கொண்டு அதிகமான பேனர்களை செய்து, காட்சிக்கு வைத்து, தமது கேஃபே வர்த்தகத்தை விரிவுப்படுத்திக் கொள்ள முடியும். உறுதி அளித்ததைப்போல தமக்கு உதவிக்கரம் நீட்டிய மடானி அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சந்திரசேகரன் கோபால் நன்றி பெருக்குடன் தெரிவித்தார்.

திலாகா சுப்பிரமணியம் கே.எல்.ஏ. கண்சால்டான்ஸி
KUSKOP அமைச்சின் SME Corp. Malaysia மூலமாக i- BAP திட்டத்தின் வாயிலாக இந்த நிதி உதவி கிடைத்தற்கு முதலில் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் கே.எல்.ஏ. கண்சால்டான்ஸி நிறுவனம், மாணவர்களுக்கு அகப்பக்கம் வாயிலாக தகவல், கணினி, தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் ஐசிடி மையமாகும்.
எட்டு மாதத்திற்கு முன்பு நிதி உதவிக்கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், நான் நிதி உதவி கோரிய பிரிவில் மானியம் முடிந்த நிலையில் i- BAP திட்டத்தில் விண்ணப்பிக்க கோரியிருந்தனர். அதன்படி அவர்கள் கேட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் மூலம் நிதி உதவி கிடைத்துள்ளது. எங்களின் பட்ஜெட்டை நிறைவு செய்வதற்கு இந்த i- BAP நிதி போதுமானதாகும். சிறு அளவில் தொடங்கிய எங்களின் இந்த வர்த்தகம், சிறப்பாக வரும் என்ற புதிய நம்பிக்கைப் பிறந்துள்ளதாக திலகா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்காக தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்த நிதி உதவியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தொழில்முனைவோர் துறையில் முன்னேறுவதற்கு பலர் உறுதி பூண்டுள்ளனர்.
மனதில் உறுதியும்,சிந்தனையில் தெளிவும், திடமான இலக்கும் கொண்டுள்ள இத்தகைய வளரும் தொழில் முனைவர்களுக்கு மடானி அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்பது வெள்ளிடை மலையாகும்.
இந்த உதவிகள் யாவும் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், அதன் வாயிலாக தங்களின் முன்னேற்றப் பாதையை தேர்வு செய்துள்ள நமது இந்திய தொழில் முனைவர்களுக்கு வாழ்த்துகள் உரித்தாகுக.