கோலாலம்பூர், டிச. 17-
உணவகங்களிலும், இதர உணவு விற்பனை மையங்களிலும் புகைப்பிடிக்கக்கூடாது என்று அரசாங்கம் வலியுறுத்தி வரும் வேளையில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், தனது நண்பர்களுடன் ஓர் உணவகத்தில் உற்சாகம் பொங்க சிகரெட் கையுமாக புகைப்பிடித்து கொண்டிருக்கும் காட்சியைக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ள வேளையில் சக அமைச்சர் ஒருவர், உணவகத்தில் புகைப்பிடிக்கும் காட்சியைக்கொண்ட அந்த புகைப்படம் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த புகைப்படத்தை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி மறு பதிவிட்டுள்ளார். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்ற வாசகத்துடன் பட விளக்கம் தந்துள்ளார்.
ஆனால், வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் விளக்கவில்லை.