ஆராவ், டிச. 17-
வெள்ளப் பேரிடரின் போது பள்ளிக் கட்டிடங்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக எதிர்காலத்தில் புதிய பள்ளிகள் பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதிகளில் நிர்மாணிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும்.
வெள்ளத்தின் போது பெரும்பாலும் பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாக பயன்படுத்தப்படுவதால் அவற்றை நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கேட்டுக்கொண்டார்.
புதிய பள்ளிக்கான இடம் பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதியில் இருக்க வேண்டும். ஏனெனில் நமது பள்ளிகள் பெரும்பாலும் தற்காலிக வெள்ளத் துயர் துடைப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். ஆகவே, பள்ளி பாதுகாப்பான நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று பெர்லிஸ் ஆராவில் நடைபெற்ற ஆராவ் தேசிய இடைநிலைப் பள்ளியின் இரண்டு புதிய கட்டிடத் தொகுதிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் ஃபாட்லினா சீடேக் இதனைக் கூறினார்.