கோலாலம்பூர், டிச. 17-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு, சிங்கப்பூருக்கு வசமானப் பின்னர் அதனை எதிர்த்து மலேசியா செய்து கொண்ட மேல்முறையீட்டை மீட்டுக்கொள்வது குறித்து அன்றைய பிரதமர் துன் மகாதீரே முடிவு செய்தார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று விளக்கம் அளித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் துன் மகாதீர் தலைமையிலான அமைச்சரவையில் நாங்கள் பெரும்பாலோர் புதியவர்கள். 2018 ஆம் ஆண்டில் மே மாதம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக்கூட்டத்தில் பத்து பூத்தே தீவு தொடர்பாக இரண்டு சட்ட விண்ணப்பங்களை துன் மகாதீர் ரத்து செய்தார்.
துன் மகாதீர் எடுத்த அந்த முடிவிற்கு நாங்கள் கட்டுப்பட்டோமே தவிர அவர் எடுத்த முடிவிற்கு ஒப்புதல் அளித்ததாக அர்த்தம் ஆகாது. துன் மகாதீர் என்ன முடிவு எடுத்தாரோ அந்த முடிவிற்கு கட்டுப்படக்கூடிய அளவிலேயே புதியதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் என்ற முறையில் எங்களின் புதிய அனுபவம் இருந்தது.
அந்த வகையில் பத்து பூத்தே தீவை மீட்டுக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முடிவு, துன் மகாதீரின் சொந்த முடிவாகுமே தவிர அமைச்சவையில் எங்களுடன் கூட்டாக விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று அந்தோணி லோக் , தமது நிலைபாட்டை இன்று தற்காத்துப்பேசினார்