கோலாலம்பூர், டிச. 18-
அடுத்த ஆண்டு ஆசியானின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்கும் நிலையில் தனது தனிப்பட்ட ஆலோசகராக தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினாவத்ராவை நியமித்துக்கொண்டு இருப்பது தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது விமர்சனம் செய்துள்ளார்.
ஆசியானின் தலைவராக பொறுப்பேற்கும் பட்சத்தில் தனது தனிப்பட்ட ஆலோசகராக யாரை நியமித்துக்கொள்ள வேண்டும் என்பது பிரதமரின் தனிப்பட்ட உரிமையாகும். ஆனால், தக்சின் ஒரு பிரச்னைக்குரிய நபர் ஆவார் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியானின் உபசரணை நாடாக மலேசியா தலைமையேற்கும் நிலையில் எதற்காக தக்சினை தனது ஆலோசகராக அன்வார் தேர்வு செய்து கொண்டுள்ளார் என்பது குறித்து தமக்கு தெரியவில்லை என்றும் இதில் தாம் தலையிட விரும்பவில்லை என்றும் துன் மகாதீர் தெரிவித்தார்.
தென்கிழக்காசிய நாடுகள் எதிர்நோக்கும் பிரச்னையை ஆசியான் தலைவர் என்ற முறையில் தம்முடன் பகிர்ந்துக்கொள்வதற்கு தக்சினைப் போன்ற ஒரு தேசியவாதி தமக்கு தேவை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.