கோலாலம்பூர், டிச. 18-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவின் இறையாண்மை மீதான விவகாரம் கையாளப்பட்ட முறை தொடர்பில் அதிகமான போலீஸ் புகார்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் முகமதுவின் வழக்கறிஞர் ரபிக் ரஷிட் அலி தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர் வங்சா மாஜு, டாங் வாங்கி, தம்பின், சுபாங் ஜெயா, செராஸ், காஜாங் மற்றம் பினாங்கு ஜார்ஜ்டவுன் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினமும், நேற்று செய்வாய்க்கிழமையும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பத்து பூத்தே தீவு உட்பட மூன்று தீவுகளின் இறையாண்மை தொடர்பில் அரச விசாரணை ஆணையம், கண்டு பிடித்துள்ள சில முடிவுகள் குறித்து குழப்பமான அறிக்கைகள் மற்றும் தவறான வியக்கியாணங்கள் செய்யப்பட்டு வருவதை கையாளும் நோக்கில் இந்த போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வருவதாக துன் மகாதீரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் கெடா சுங்கைப்பட்டாணி மற்றும் இதர மாநிலங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு ஆகியோருக்கு எதிராக புகார் அளிக்கப்படும் என்று துன் மகாதீரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.