கோலாலம்பூர், டிச. 18-
2024 ஆம் ஆண்டுக்கு விடைக்ககொடுக்கவிருக்கும் இக்காலக்கட்டத்தில் இவ்வாண்டில் பல்வேறு குற்றச்செயல்களை அரச மலேசிய போலீஸ் படை வெற்றிகரமாக முறியடித்ததுடன், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் அறிவித்துள்ளார்.
போலீசார் வெற்றிகரமாக முறியடித்த சம்பவங்களில் கொடிய விலங்கினங்கள் கடத்தல் முயற்சிகளும் அடங்கும் என்று அவர் விளக்கினார். அரச மலேசிய போலீஸ் படையின் இந்த மகத்தான் வெற்றியானது உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி பிரிவின் வாயிலாக விளைந்ததாகும் என்று ஐஜிபி புகழாரம் சூட்டினார்.
ஓப் பெர்செப்பாடு கஸானா, ஓப் திரிஸ், ஓப் கொன்ட்ராபன் மற்றும் ஓப் இ- வேஸ்ட் ஆகிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் வாயிலாக போலீஸ் படையின் உளவுத்துறை, கொடிய விலங்கினங்கள் கடத்தல் தொடர்பில் 136 சம்பவங்களுக்கு தீர்வு கண்டுள்ளது. 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 434 மில்லின் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.
இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி பிரிவின் மாதாந்திரப் பேரணிக் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஐஜிபி இவ்விவரத்தை வெளியிட்டார்.