டிச. 18-
அனைத்து அரசு ஊழியர்களும் BMI எனப்படும் ஆரோக்கியமான உடல்நிறை குறியீட்டை பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கும் எந்தவொரு ஆணையோ அல்லது அறிக்கையையோ பொதுச் சேவைத் துறை JPA வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் அனைத்து அரசு ஊழியர்களும் ஆரோக்கியமான BMI-யைப் பெற்றிருக்க வேண்டும் என்று JPA கட்டாயப்படுத்துவதாக, கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி மீரி மருத்துவமனை இயக்குநர் Dr Jack Wong Siew Yu அறிக்கையை JPA மறுத்துள்ளது.
அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த சுகாதார பரிசோதனையை மேற்கொண்டு, உடல் எடை, உயரத்தை அளந்து, BMI நிலையைப் சரிபார்த்து, மனிதவள மேலாண்மை தகவல் அமைப்பில் (HRMIS) அறிவிக்க வேண்டும் என்று JPA ஊக்குவிப்பதாக அத்துறை விளக்கியுள்ளது.
இருப்பினும், அரசு ஊழியர்களிடையே உள்ள உடல் பருமன் பிரச்சனையை சமாளிப்பதில் சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவதில் JPA தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும் ஒட்டுமொத்த பொது ச்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கிறது என்றும் அத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசு ஊழியர்களைப் பற்றிய எந்தவொரு அறிக்கையும் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் இருக்க வேண்டும் என்றும், உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பொதுச் சேவைத் துறையை மேற்கோள் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.