டிச. 18-
ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த சிறார்கள் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பில் அந்த இல்லங்களை வழிநடத்தி வந்த GISB Holdings நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Nasiriddin Mohd Ali மற்றும் அவரின் மனைவி Datin Azura Muhamad Yusof ஆகியோர் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்கில் ஜோகூர்பாரு உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்கவிருக்கிறது.
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் அந்த தம்பதியர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சார்வு செய்துள்ள Habeas Corpus எனும் ஆட்கொணர் வழக்கு மனுவிற்கு சட்டத்துறை அலுவலகம் சார்பில் ஆஜரான கூட்டரசு வழக்கறிஞர்கள் தங்களின் பூர்வாக ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர்.
அந்த தம்பதியர் சார்வு செய்துள்ள ஆட்கொணர் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கக்கூடாது என்று கூட்டரசு வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்ற Mohamad Firdaus Sadani Ali கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்..
இது போன்ற ஆட்கொணர் மனுவிற்கு அனுமதி அளித்தால், நீதிமன்ற நடைமுறைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, கொல்லைப்புற வழியாக வெளியேறி விடுவார்கள் என்று கூட்டரசு வழக்கறிஞர் தமது பூர்வாக ஆட்சேபத்தில் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு வழக்கறிஞரின் இந்த பூர்வாங்க ஆட்சேப மனுவைத் தொடர்ந்து அந்த தம்பதியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் ஆட்கொணர் மனுவிற்கு அனுமதி அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்கவிருக்கிறது.