சிரம்பான், டிச. 20-
மக்களின் நல்வாழ்விற்காக 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் வாயிலாக 2 லட்சம் ரிங்கிட்டை நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வசதி குறைந்த மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்களை உள்ளடக்கிய கூடைகளை வழங்கும் உணவு வங்கித் திட்டம் நேற்று முன்தினம் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.

இந்த உணவுப்பொருள் கூடைகள் யாவும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 100 பேக்கெட் வீதம் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
அரிசி, சீனி, சமையல் எண்ணெய், மாவு, பால் டின், தேதூள் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்கள் ஒவ்வொரு பாக்கேட்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மத்திய அளவில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு வாயிலாகவும் இந்த உதவிித் திட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, அரசாங்க ஏஜென்சி மற்றும் தனியார் துறை உட்பட வியூக தோழமை ஒத்துழைப்பு வாயிலாக உதவித் தேவைப்படக்கூடிய மக்களுக்கு உணவுக்கூடைகள் வழங்கப்படுவதாக வீரப்பன் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் உணவு வங்கித் திட்டமானது, B40 தரப்பினர் உட்பட வசதி குறைந்தவர்களுக்கும், உதவித் தேவைக்கூடிய மக்களுக்கும் உதவும் நோக்கத்தைக் கொண்டது என்பதையும் வீரப்பன் தெளிவுபடுத்தினார்.
