கோலாலம்பூர், டிச. 20-
சட்டவிரோதப் பண மாற்றம் மற்றும் வருமான வரி தொடர்பில் 17 குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோரை விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தாம் தலையிடவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரோஸ்மாவை விடுதலை செய்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் முடிவு, இவ்வழக்கை வழிநடத்திய சட்டத்துறை அலுவலகத்தின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அந்த முடிவில் தாம் தலையிடவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ரோஸ்மா விடுதலை குறித்து பல்வேறு வியாக்கியாணங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அது உயர் நீதிமன்றத்தின் முடிவாகும். அந்த முடிவு தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது சட்டத்துறை அலுவலகத்தைப் பொறுத்ததாகும் என்று பிரதமர் விளக்கினார்.
எனினும் உயர் நீதிமன்றத்தின் முடிவை நாம் மதிக்க வேண்டும். அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கருதப்படுமானால் அது சட்டத்துறை அலுவலகத்தைப் பொறுத்ததாகும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
எனினும் இவ்விவகாரத்தை சர்ச்சையாக்க வேண்டியதில்லை. காரணம், இது உயர் நீதிமன்றத்தின் முடிவாகும் என்று இன்று கோலாலம்பூரில் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் Malaysian First எனும் சுயசரிதை நூலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.