டுங்குன், டிச. 21-
மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றின் துரப்பண மேடையில் இரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த தொழிலாளி ஒருவர் மீது இரும்புத்துண்டு விழுந்து, தோள்பட்டையில் செருகிக்கொண்டு பெருங்காயத்துடன் அந்தரங்கத்தில் தொங்கிய நிலையில் பெரும் துயரத்திற்கு ஆளானார்.
அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல், பாதுகாப்புப் பட்டையின் உதவியுடன் அந்தரங்கத்தில் தொங்கிய அந்த தொழிலாளியை, தீயணைப்பு, மீட்புப்படையினர் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பாதுகாப்பாக மீட்டனர்.
இச்சம்பவம் திரெங்கானு, டுங்குன் , பக்கா தொழிற்பேட்டையில் நேற்று மாலை 4.45 மணியளவில் நிகழ்ந்தது.
சுமார் 84 மீட்டர் உயரத்தில் பாதுகாப்பு பட்டையின் உதவியுடன் தொங்கிக்கொண்டு இருந்த அந்த தொழிலாளி, தோள்பட்டையில் ஏற்பட்ட ஆழமான காயம் ஏற்பட்டிருந்தாக பக்கா தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் ரிசுவான் ரம்லி தெரிவித்தார்.
ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்ட அந்த தொழிலாளியை துரப்பண மேடையிலிருந்து கீழே இறக்கும்பணி மாலை 6.30 மணியளவில் நிறைவுற்றது. பின்னர் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமட் ரிசுவான் குறிப்பிட்டார்.