கோலாலம்பூர், டிச.21-
கோலாலம்பூர் மற்றும் கிளந்தானில் போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கையில் இரண்டு பறவைகளுடன் 600க்கும் மேற்பட்ட மாதிரி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வனவிலங்கு பாதுகாப்பு குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் கோத்தாபாரு மற்றும் கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மாதிரி சுடும் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப்பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட மாதிரி துப்பாக்கிகளில் 32 ரபில் மற்றும் 2 ரோக்ஸ் மாக்ப்லெஸ் ஆயுதங்களும் அடங்கும். தவிர, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படாத சில மருந்துப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர், பல மாதங்களாக இணையத் தொடர்பு வாயிலாாக இந்த மாதிரி துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 36 ஆயிரத்து 971 ரிங்கிட்டாகும் என்று அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.