மூவார், டிச. 21-
சமூக வலைத்தளங்களில் வைரலான கடந்த செவ்வாய்க்கிழமை , ஜோகூர் மூவாரில் ஒரு வீட்டில் நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு ஆடவர்களும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த மூவரும் மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களை 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளில் ஒருவன் போலீசாரின் உளவுத்தகவல் அடிப்படையில் நேற்று காலை 9 மணியளவில் பேராக், சுங்காய் அருகில் ஒரு காரில் கை செய்யப்பட்டான். அதேவேளையில் காரில் இருந்த அவனது காதலியும் வளைத்துப்பிடிக்கப்பட்டார்.
மூவார், தாமான் ஸ்ரீ திரே என்ற வீடமைப்புப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் போலீசார் இரு ஆடவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த இரண்டு ஆடவர்களும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இரு ஆடவர்களும் பெரோடவா மைவி காரைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் முயற்சியின் போது, அவ்விரு கொள்ளையர்களையும் எதிர்த்துப் போராடிய வீட்டு உரிமையாளரான 60 வயது நபரும், அவரின் 34 வயது மகனும் காயம் அடைந்தனர்.
இக்கொள்ளைச் சம்பவத்திற்கு அந்த இரு கொள்ளையர்களும் பயன்படுத்திய பெரோடவா மைவி கார், மலாக்கா, ஜாசினில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.