கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவசம்

கோலாலம்பூர், டிச. 21-


அடுத்த வாரம் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 23 ஆம் தேதி திங்கட்கிழமை முன்னிரவு 11.59 மணிக்கு தொடங்கி டிசம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி வரை இரண்டு தினங்களுக்கு டோல் கட்டண விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

ஜோகூர்பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் தஞ்சோங் குபாங் ஆகிய இரண்டு டோல் சாவடி மையங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து டோல் சாவடிகளிலும் இந்த விலக்களிப்பு பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையின் போது 25 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் இரண்டு தினங்களுக்கு டோல் கட்டண விலக்களிப்பு வழங்கப்படுவது மூலம் 38 மில்லியன் ரிங்கிட் டோல் கடட்டண செலவை அரசாங்கம் ஏற்கவிருப்பதாக அலெக்ஸ்சண்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS