கோலாலம்பூர், டிச. 21-
அரசு சேவையில் ஓய்வூதியம் பெற்று வருகின்ற முன்னாள் பணியாளர்கள் மற்றும் வாழையடி வாழையாக ஓய்வுதியம் பெற்று வருகின்றவர்களின் நலனை பாதுகாக்கும் முயற்சியாக அவர்களுக்கு சிறப்பு கெளரவிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள பொதுச் சேவை ஊழியர்களுக்கான சம்பள முறை, பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி ஓய்வு பெற்ற முன்னாள் பணியார்களுக்கும், ஓய்வூதியத் தொகையை பெறுகின்றவர்களுக்கும் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று சுபாங் ஜெயாவில் பல்வேறு அரசாங்க இலாகாக்கள் அதிகாரிகளின் முன்னிலையில் நடப்பு விவகாரங்கள் குறித்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள முறை, 1980 ஆம் ஆண்டு ஓய்வுதிய ஒருங்கிணைப்பு சட்டத்தின் 3 ஆவது பிரிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சம்பள முறையை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும் பிரதமர் விளக்கினார்.
இந்த புதிய சம்பள முறையில் ஓய்வுதியம் பெற்று வருகின்றவர்களின் நலனுக்கும் அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓய்வூதியம் பெறுகின்றவர்களின் ஆகக்கடைசியான சம்பளத்தின் விழுக்காடு அதிகரிப்புக்கு ஏற்ப, அந்தந்த சேவை குழுக்களின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகைகள் சீர் செய்யப்பட்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.