130 மில்லின் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: இந்திய சமுதாயம் ஓரங்கட்டப்பட்டுள்ளதா?

டிச. 21-

2025 ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு வெறும் 130 மில்லியன் ரிங்கிட் நிதி மட்டுமே அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி, பல்வேறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

மலேசியவில் மூன்றாவது மிகப்பெரிய இனமான இந்தியர்களுக்கு வழக்கம் போல் மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும், தெக்குன் கடனுதவிக்கு 30 மில்லியன் ரிங்கிட்டும் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக சில தரப்பினர் வியக்கியாணம் செய்து வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையான 407.5 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 421 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, முந்திய பட்ஜெட்டுன் ஒப்பிகையில் 3.3 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீட்டைக்கொண்ட பட்ஜெட்டாகும்.

மலேசிய வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட் என்று வர்ணிக்கப்பட்ட 2025 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இந்திய சமுதாயத்தின் மேன்மைக்கு பிரத்தியேகத் திட்டம் எதுவும் இல்லை என்பது சில தரப்பினரின் குற்றச்சாட்டாகும்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்

ஆனால், அவர்களின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கிறார் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்.

இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 130 மில்லியன் ரிங்கிட் குறித்து சர்ச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ரமணன் குறிப்பிடுகிறார். உண்மை நிலவரத்தை அறியாமல் கண்மூடித்தனமாக கூறப்படும் குற்றச்சாட்டினால் இந்திய சமுதாயம், எதிர்மறையான கருத்தினால் உந்தப்படலாம் என்று துணை அமைச்சர் நினைவுறுத்துகிறார்.

இந்திய சமுதாயத்தற்கு ஒதுக்கப்பட்ட 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே அவர்களின் கண்களுக்கு தெரிகிறது. ஆனால், பட்ஜெட்டின் உள்ளடக்கத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் ரமணன்.

இன ரீதியான ஒதுக்கீடு இல்லை

ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியாக நிது ஒதுக்கீடு செய்து மலேசியர்களை பிளவுப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விரும்பவில்லை, குறிப்பாக, “ஏ” சமூகத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்கீடு, “பி: சமூகத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்கீடு என்று பிரதமர் பிரிக்கவில்லை. அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் மலேசியர்கள் என்ற ஒட்டுமொத்த கண்ணோட்டத்திலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரமணன் குறிப்பிடுகிறார்.

கடந்த காலங்களில் சீனப்பள்ளிகளுக்கு ஒரு தொகை, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு தொகை ஒதுக்கீடு செய்ததைப் போல அல்லாமல் மலேசிய மாணவர்களின் கல்வி மேம்பாடு என்ற அளவில் கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு என ஒட்டுமொத்த நிலையில் மொத்தம் 82.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கல்வி அமைச்சுக்கு 64.1 பில்லியன் ரிங்கிட்டும், உயர் கல்வி அமைச்சுக்கு 18 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காடட்னார்.
துணை அமைச்சர் ரமணனின் இந்த வாதத்திற்கு ஏற்ப, 2025 ஆம் ஆண்டு பட்ஜெட், உண்மையிலேயே தனித்துவமானதாகும். காரணம், இன ரீதியாக நிதி ஒதுக்கீடு தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஒப்புக்கெண்டுதான் ஆக வேண்டும்.

நாட்டிற்கும், மக்களுக்கும் ஒரு முழுமனதாக கடமை உணர்வுடன் இந்த 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏழை சமூக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் அதே வேளையில் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதற்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படவிருக்கிறது. இன ரீதியான பின்னணி என்ற பாரபட்சம் இல்லாமல் ஒவ்வொரு பிள்ளைக்கும் தரமான கல்வி வாய்ப்பு சென்றடைவதை இது உறுதி செய்கிறது.

பள்ளிகள் பராமரிப்புக்கு 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் அரசாங்கம் மொத்தம் 2 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒட்டுமொத்த நிலையில் இது இன ரீதியான பட்ஜெட் இல்லையென்றாலும் இந்நாட்டில் இந்திய சமுதாயத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் வழங்கக்கூடிய பொதுவான நிதிக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்திய சமுதாயத்திற்காக 130 மில்லியன் ரிங்கிட்டை பிரதமர் ஒதுக்கீடு செய்துள்ளார் என்றால் இது இந்திய சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே கருத வேண்டும்.

குறிப்பாக, மித்ராவிற்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக இந்தியர்களின் சமூக, பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா, இந்தியர்களுக்காக பல்வேறு திட்டங்களை மிக ஆக்கப்பூர்வமான முறையில் அமல்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 525 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6000 மடிக் கணினிகள் வழங்கப்பட்டத் திட்டம், ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக மித்ரா 3 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு இந்த மடிக்கணினிகள் பயன்படுத்தப்படும் திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு பெற்றது.

இதேபோன்று இந்திய சமுதாயத்திற்கான சமூகப்பொருளாதார மேம்பட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வரும் அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் , அறக்கட்டளைகள் தங்களின் சமூகவியல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு அவற்றுக்கு நிதி வழங்கம் மித்ராவின் PPSMI திட்டம் எதிர்பாராத பலன்களை இந்திய சமுதாயத்திற்கு வழங்கி வருகின்றன.

அதிகமான திட்டங்கள் அமல்

இந்திய சமுதாயத்திற்கு 2025 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 130 மில்லின் ரிங்கிட் என்றாலும் அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் இந்திய சமுதாயம் பலன் அடையும் வகையில் மித்ராவிற்கு அடுத்த நிலையில் அரசாங்கம் குறிப்பாக டத்தோஸ்ரீ ரமணன் துணை அமைச்சராக இருக்கும் தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் (KUSKOP ) வாயிலாக அதிகமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது வெள்ளிடை மலையாகும்.

குறிப்பாக, மலேசிய இந்திய சமுதாயத்திற்கான தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக பிரத்தியேகமாக 7 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

KUSKOP அமைச்சின் வாயிலாக தெக்குன் நேஷனல் மூலமாக 3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் ஸ்பூமி கோஸ் பிக் ( Spumi GOES BIG ) தொடங்கப்பட்டுள்ளது.

அமானா இக்தியார் மலேசியா மூலமாக இந்தியப் பெண்களுக்கான புதிய வழமை, வளப்ப மேலாண்மைத்திட்டமான பெண் ( PENN ) வாயிலாக 50 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேங்க் ராக்யாட் மூலமாக பேங்க் ராக்யாட் இந்தியத் தொழில் முனைவோர் நிதி அளிப்புத் திட்டமான BRIEF-I, 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய சிறுவணிகர்களுக்கான உத்வேகத் திட்டமான i-BAP திட்டம், SME Corp. வாயிலாக 6 மில்லியன் ரிங்கிட் நிதித்திட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய சமுதாய கூட்டுறவுக்கழகங்களை சேர்ந்த 800 பேர் பயன்பெறும் பொருட்டு மலேசிய கூட்டுறவுக் கழக ஆணையத்தின் வாயிலாக வெற்றிகரமான கூட்டுறவுக்கழகத்தை எவ்வாறு நடத்துவது என்பது மீதான தெளிவை ஏற்படுத்துவதற்கு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் தகுதி பெற்ற இந்திய கூட்டுறவுக்கழகங்களுக்கு தலா 30 ஆயிரம் வெள்ளி மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய தொழில்முனைவோர் அதிகாரமளிப்புத் திட்டமான EIP 2024 திட்டத்தின் மூலம் KUSKOP அமைச்சின் வாயிலாக மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து தொழில் முனைவோர் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய சமுதாய தொழில்முனைவோருக்கான ஆளுமையை வலுப்படுத்துவது, தொழில்முனைவோர் பயிற்சி, செயற்கை நுண்ணறிவு ( AI ), பயற்சி, நிதி,தகவல்,ஊடகப்பயிற்சி அளிப்பது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களை உச்சநிலைக்கு கொண்டு வருவதற்கு தெக்குன், அமானா இக்தியார் மலேசியா, எஸ்எம்இ கார்ப் மற்றும் இன்ஸ்கேன் ( INSKEN ) மூலம் EIP 2024 திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த சமூகமாக உருவாக வேண்டும்

தவிர, இந்திய சமுதாயம், நாட்டின் தேசிய நீரோடையில் உள்ள பலாபலன்களை அறிந்து கொள்வதற்கு தகவல் பெற்ற சமூகமாக விளங்க வேண்டும் என்ற நோக்கில் வணக்கம் மடானி திட்டத்தை KUSKOP துணை அமைச்சர் ரமணன் தொடக்கியுள்ளார்.

மக்களின் சிரமங்கள் எதுவாக இருந்தாலும் தகவல் பெறுவது, சமுதாயத்திற்கு விளக்கம் தருவது, சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்னைகளை கேட்டறிதல், மக்களின் மனக்குறைகளை செவிசாய்ப்பது, கருத்து பரிமாற்றத்திற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது ஆகியவை இந்திய சமுதாயத்திற்காக அமல்படுத்தப்பட்டுள்ள வணக்கம் மடானி திட்டத்தின் நோக்கமாகும்.

ஆக ஒட்டுமொத்த நிலையில் இந்திய சமுதாயத்திற்காக 130 மில்லின் ரிங்கிட் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்ட நிலையில் சமுதாயத்தின் பொருளாதார, சமூகவில் மேன்மைக்காக இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை வெற்றிகரமாக கொண்டாடிய மடானி அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமூகம் ஓரங்கட்டப்படவில்லை. ஒதுக்கப்படவில்லை என்பதற்கு மேற்கண்ட திட்டங்களே ஆதாரமாக நிரூக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மையாகும்.

WATCH OUR LATEST NEWS