கோலாலம்பூர், டிச. 21-
வரும் புதன்கிழமை கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மாநகரில் உள்ள மக்கள் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் தினசரி வாகனப் போக்குவரத்து கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்காலக்கட்டத்தில் 25.5 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்.எல்.எம். தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹருண் கூறினார்.
சுமார் 21.2 லட்சம் வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ் விரைவுச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையை 188,130 வாகனங்களும் கிழக்கு கடற்கரை 1 ஆம் கட்ட நெடுஞ்சாலையை 39,830 வாகனங்களும் இரண்டாம் கட்ட நெடுஞ்சாலையை 87,380 வாகனங்களும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.