பினாங்கு, டிச. 21-
தமது தலைமையில் செயல்பட்டு வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு எதிராக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பினாங்கு, Padang Kota –வில் ஒரு சிலரால் ஏற்பாடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் பேரணி, மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகும் என்று அந்த அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் தெரிவித்துள்ளார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவாக தாம் பொறுப்பேற்றப்பின்னர், பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தனியார் கணக்காய்வு நிறுவனத்தின் வழி வாரியத்தின் முந்தைய நிர்வாகத்தின் கணக்குகளை மீள்ஆய்வு செய்த போது, ஒரு சில முறைகேடுகள் நிகழ்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது..
இதன் தொடர்பில் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்விவகாரத்தை விசாரணை செய்வதற்கு வழிவிடும் வகையில் தமது தலைமையிலான இந்து அறப்பணி வாரியம் பொறுப்பாளர்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM –மிடம் புகார் அளித்தராக ராயர் விளக்கினார்.
அந்த புகாரின் அடிப்படையில் SPRM தற்போது இந்து அறப்பணி வாரியத்தில் முழு வீச்சில் விசாரணை செய்து வருகிறது.
.
SPRM- மினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விசாரணையை தடுக்கவும், பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் தமது தலைமையிலான இந்து அறப்பணி வாரியத்திற்கு எதிராக நாளை ஞாயிற்றுக்கிழமை ஒரு சிலர், இந்தப் பேரணியை கூட்டப் போவதாகவும், பினாங்கு ஆளுநரிடம் மகஜர் ஒன்று கொடுக்கப் போவதாகவும் கூறி, மக்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமக்கு தெரியவந்துள்ளது என்று ராயர் குறிப்பிட்டார்.
இது உண்மையிலேயே மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நடவடிக்கையே தவிர ஓர் உன்னத நோக்கத்தை அடிப்படையாக கொண்டது அல்ல என்பதை பினாங்கு வாழ் இந்துக்களுக்கு தெரிவித்துக்கொள்ளவிரும்புவதாக ஜெலுத்தோங் எம்.பி.யான ராயர் இன்றிரவு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே முந்தைய நிர்வாகத்தில் நிகழ்ந்து இருப்பதாக கூறப்படும் முறைகேடுகள் குறிப்பாக, தங்க ரத விவகாரம் தொடர்பில் இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் டத்தோ எம். ராமச்சந்திரன், கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி SPRM அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது தெரிந்ததே.