6,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி விலகியதை கவனத்தில் கொண்டுள்ளது

கோலாலம்பூர், டிச. 22-

கடந்த ஐந்து ஆண்டுகளில் 6,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி விலகியதை கவனத்தில் கொண்டுள்ளது சுகாதார அமைச்சு. இதில் நிரந்தர வேலைக்கு மாறுவதற்காக பணி விலகிய ஒப்பந்த மருத்துவர்களும், கல்வித் துறைக்குச் சென்ற மருத்துவர்களும் அடங்குவர். சுகாதார அமைச்சில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதை அதன் அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலை ஒரு பெரிய சவாலாக உள்ளது என்றும், மருத்துவர்கள் தனியார் துறைக்கு இடம்பெயர்வதைத் தடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். பொதுச் சேவைத் துறையில் மருத்துவர்களைத் தக்கவைக்க பல உத்திகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

RakanKKM முன்னெடுப்பின் மூலம் சிறந்த ஊதியமும் மேம்படுத்தப்பட்ட வசதிகளும் வழங்கப்படும். ஊதிய உயர்வு, நெகிழ்வான வேலை நேரம் போன்ற குறுகிய கால நடவடிக்கைகளும் முன் எடுக்கப்படும். வேலையிலும் வாழ்க்கையிலும் சமநிலையை மேம்படுத்த அமைச்சு உறுதிபூண்டுள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து, முக்கியமான பிரிவுகளுக்கு அதிக மருத்துவர்கள் விநியோகிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கூறினார். நாடு முழுவதும் இந்த சவால் உள்ளது என்றும், இதனைச் சமாளிக்க அமைச்சு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். சுகாதார சேவை ஆணையத்தை நிறுவுவதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS