பினாங்கு, டிச. 27-
அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு தைப்பூச விழா குறித்து பினாங்கு இந்து அறப்பணி வாரியப் பொறுப்பாளர்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினருடன் இன்று ஒரு கலந்துரையாடலை நடத்தினர்.
ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என். ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. . லிங்கேஸ்வரன் உட்பட இதரப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
2025 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூச விழாவை நாட்டுக்கோட்டை செட்டியார்களுடன் இணைந்து ஒற்றுமை தைப்பூச கொண்டாட்ட விழாவாக தொடர்ந்து நிலைநிறுத்துவதென முடிவெடுக்கப்பட்டதாக அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
அதேவேளையில் தங்க ரதம் மற்றும் வெள்ளி ரதம் புறப்பாடுகளின் நேரம் குறித்தும் முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தைப்பூச முதல் நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு பினாங்கு, குயின் ஸ்ரீட்டில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து தங்க ரதம், கெபுன் பூங்காவில் உள்ள தண்ணீர்மலை முருகன் கோவிலை நோக்கிப்படும்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது காலை 7.00 மணிக்கு பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டிலிருந்து வெள்ளி ரதம், தண்ணீர் மலை, நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலை நோக்கிப் புறப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இரு ரதங்களின் புறப்பாட்டின் போது பக்தர்கள் மனநிறைவுடன் தரிசனம் பெற வேண்டும் என்பதே இரு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருப்பதால் 2025 ஆம் ஆண்டு தைப்பூச விழாவிற்கும் ஒற்றுமை தைப்பூசம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
மேலும் தைப்பூச ஏற்பாடுகள் தொடர்பாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்புக்கூட்டத்தில் பினாங்கு மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரனும் கலந்து கொண்டதுடன், நெகிழிப்பை பயன்பாடு இல்லாத தைப்பூச விழாவாக கொண்டாடுவதற்கு அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் டாக்டர் லிங்கேஸ்வன் குறிப்பிட்டார்.