திரெங்கானு, டிச.27-
திரெங்கானு மாநிலத்தில் கல்வத் குற்றவாளி ஒருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் இன்று 6 பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டது, மக்களை நல்வழிப்படுத்துவதற்கு இறைவன் பிறப்பித்த கட்டளையாகும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் வர்ணித்துள்ளார்.
பாஸ் தலைமையிலான திரெங்கானு அரசாங்கம், இறைவனின் ஆணைக்கு கீழ்படிந்து இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றமானது, முழுக்க முழுக்க மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து கேள்வி எழுப்பவோ, சர்ச்சை செய்யவோ இடமில்லை என்று அந்த மதவாதத் தலைவர் வாதிட்டுள்ளார்.
இஸ்லாத்தின் கோட்பாட்டிற்கு உட்பட்ட ஷரியா சட்டத்தை பலப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் திரெங்கானு மாநில அரசாங்கம், எந்த அளவிற்கு உறுதிபாட்டுடன், அதனை ஒரு வேள்ளியாக கொண்டுள்ளது என்பதற்கு பொது மக்கள் முன்னிலையில் இந்த பிரம்படித் தண்டனை நிறைவேற்றம் ஓர் எடுத்துக்காட்டாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
42 வயது முகமட அப்பெண்டி என்ற கல்வத் குற்றவாளிக்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு கோலத்திரெங்கானு மஸ்ஜிட் அல்- முக்தாபி பில்லா ஷா பள்ளிவாசலில் பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
திரெங்கானு மாநிலத்தில் ஷரியா சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்ததிற்கு பிறகு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றத்திற்கு ஆளான முதலாவது கல்வத் குற்றவாளியாக அப்பெண்டி விளங்குகிறார். .