டிச. 28-
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வி அமைச்சுக்கு மொத்தம் 64.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்திய ஆண்டு 58.7 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
மலேசிய கல்வி அமைச்சு வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.
நமது பிள்ளைகள் நல்ல அடிப்படை வசதிகளுடன் தரமான கல்வியிடச்சூழலில் கற்றல், கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளார்.
இந்த ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் தரம் மற்றும் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 44 புதிய பள்ளிகள் கட்டப்படவிருக்கின்றன.
5.3 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 17 வகையான கல்வி உதவிகள் தொடர்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளன. வசதி குறைந்த மாணவர்கள் வெறும் வயிற்றுடன் கல்விக் கற்கும் நிலையில்லாமல், அவர்களுக்கு உணவு வழங்கும் RMT எனப்படும் கூடுதல் உணவுத் திட்டத்திற்கு 180 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக 860 ஆயிரம் மாணவர்கள் RMT உணவு பெறுவதற்கு வகை செயயப்பட்டுள்ளது.
தவிர பள்ளி மாணவர்களுக்கான முன்கூட்டியே வழங்கப்படும் நிதி உதவித் திட்டத்திற்கு, பெற்றோர்களின் பின்புலத்தை பார்க்காமல் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் படிவ மாணவர்கள் வரை 5.2 மில்லியன் மாணவர்கள் தலா 150 ரிங்கிட்டை பெறும் வகையில் 800 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உதவிகள் மத்தியில் பள்ளியின் கட்டட வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு பள்ளி பராமரிப்பு மற்றும் சீரமைப்புப்பணிகளுக்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு LPS எனப்படும் பள்ளி மேலாளர் வாரியம் அல்லது பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தொடர்ந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மடானி அரசாங்கம் இவ்வாறு வழங்கிய உதவியின் வாயிலாக தமிழ்ப்பள்ளிகள் மிகச்சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளில் எவ்வித பழுதுயின்றி தரமான கட்டட வசதிகளுடன் மாணவர்கள் தங்குத்தடையின்றி அவர்களில் கல்வித் தொடர வேண்டும் என்பதற்காக இந்த மானியங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஜெயசீலன் ராஜு
கல்வி விவகாரத்தில் பாகுபாடுயின்றி பள்ளிகளின் தேவைகளை அறிந்து அரசாங்கம் உதவி வருவது, மடானி அரசாங்கம் கல்விக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் அறிய முடிகிறது என்கிறார் ஈப்போ, தேசிய வகை அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரான ஜெயசீலன் ராஜு கூறுகிறார்.
ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேசிய வகை அரசியர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பொறுப்பில் இருந்து வருவதாக ஜெயசீலன் கூறுகிறார்.
ஆகக்கடைசியாக தங்களுக்க கிடைத்த 2 லட்சத்து 14 ஆயிரம் வெள்ளி மானியத் தொகை ஒதுக்கீட்டின் மூலம் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் முழுமையாக பயன்படுத்திக்கொண்டதாக ஜெயசீலன் குறிப்பிடுகிறார்.
மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஆறு வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் போர்ட் பொருத்தப்பட்டுள்ளதாக ஜெயசீலன் கூறுகிறார்.
அதேவேளையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அத்தகைய முக்கியத்துவத்தை பள்ளியின் வளர்ச்சிக்கும்,பாதுகாப்பிற்கும் பாடுபட்டு வரும் பணியாளர்களையும் மறந்து விடக்கூடாது. அவர்களின் நனைனையும் புறக்கணித்து விடக்கூடாது.
அந்த வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கடமையில் அமர்த்தப்பட்டுள்ள பாதுகாவலர்கள் நுழைவாயில் சாவடி மேமம்படுத்தப்பட்டுள்ளதாக ஜெயசீலன் குறிப்பிட்டார்.
தற்போது இப்பள்ளியில் 300 மாணவர்களும், 30 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான இடமின்றி பள்ளித்திடலில் ஒரு பகுதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
இதனால் மாணவர்களின் புறப்பாட நடவடிக்கை பாதிக்கப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பள்ளி அருகிலேயே ஓர் இடம் ஒதுக்கப்பட்டு,அவ்விடம் சுத்தம் செய்யப்பட்டு,சமப்படுத்தப்பட்டு, தார் செப்பனிடப்பட்டு, ஒரு பெரிய வளாகம் உருவாக்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் மாணவர்கள் தாங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொள்வதற்கும், ஏதாவது நிகழ்வு நடத்துவதற்கும் அவ்விடம் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜெயசீலன் குறிப்பிட்டார்.
எங்களுக்கு அரசாங்கம் வழங்கிய 2 லட்சத்து 14 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை பள்ளி பராமரிப்புப்பணிகளுக்கு முழுமையாக பயன்படுத்திக்கொண்டோம். பள்ளியின் கண்ணாடி கதவுகளை அகற்றிவிட்டு, இழுத்துமூடும் கதவுமுறையை பொருத்தும் திட்டமும் தங்களுக்கு இருப்பதாக குறிப்பிட்ட ஜெயசீலன், அரசாங்கம் தொடர்ந்து வழங்கக்கூடிய நிதி உதவியின் மூலம் கதவு முறை சீரமைக்கப்படும் என்றார்.
மேலும் பள்ளி மேன்மைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்றொரு 70 ஆயிரம் ரிங்கிட் மானியம் மூலம் மாணவர்களுக்கு தரமான வசதிகளை கொண்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதையும் ஜெயசீலன் சுட்டிக்காட்டினார்.

செல்வகணேசன் சுப்பிரமணியம்
பேரா, புந்தோங், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் செல்வகணேசன் சுப்பிரமணியம் கூறுகையில் ஆகக்கடைசியாக தங்கள் பள்ளிக்கு கிடைத்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மானியத்தை, பள்ளியின் மழலையர் வகுப்பறையை மேம்படுத்திக்கொள்வதில் முழுமையாக பயன்படுத்திக்கொண்டதாக கூறுகிறார்.
பள்ளியின் பிரதான கட்டடத்திலிருந்த சுமார் நூறு அடிதூரத்தில் உள்ள மழலையர் வகுப்பறையில் மழைக் காலங்களில் சாரல், வகுப்பறைக்குள் வரும் அளவிற்கு இருந்தது. இதனை தடுப்பதற்கு தாழ்வாரம் இறக்கப்பட்டு உரிய தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டன. மழலையர் வகுப்பறையிலிருந்து மாணவர்கள் நடந்து வருவதற்கு நடைப்பாதை ஒன்றும் அமைக்கப்பட்டது.
125 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்ற புந்தோங், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்ற ஒரு பள்ளியாக விளங்கி வருவதில் பெருமிதம் கொள்வதாக செல்வகணேன் குறிப்பிட்டார்.
மேலும் சாக்கடை நீர்செல்லும் பிரதான குழி, சுத்தம் செய்யப்பட்டு, அடைப்புகள் அகற்றப்பட்டு,சாக்டை நீர் தங்குத் தடையின்றி செல்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக தாம் பொறுப்பேற்று இருந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு LPS தலைவராக நியமிக்கப்பட்ட சூழலில் அரசாங்கம் வழங்கி வருகின்ற மானிய உதவிகள் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக செல்வகணேசன் தெரிவித்தார்.

சிங்காரவடிவேலன் வெள்ளையன்
சிம்மோர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிங்காரவேலன் வெள்ளையன் கூறுகையில்,பள்ளிக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரிங்கிட் மானியத்தின் மூலம் ஆறு வகுப்பறைகளிலும் இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
கடந்த பத்து வருடங்களாக பள்யியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக தாம் பொறுப்பேற்று இருந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அரசாங்கம் வழங்கக்கூடிய மானியம், பள்ளியின் உபயோகமான குறிப்பாக மாணவர்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கும், பள்ளி பராமரிப்புக்கும் முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளதாக சிங்காரவடிவேலன் கூறுகிறார்.
96 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் வீற்றிருக்கும் இப்பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பள்ளி சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பள்ளி கண்டீன் முழுமைகாக உடைக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டுள்ளது. பள்ளி கூரைகள் மாற்றப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பிரத்தியேகமாக கணினி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சிங்கார வடிவேலன் தெரிவித்தார்.

புண்ணியமூர்த்தி தங்கராஜ்
பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மெங்களம்பு, மகிழம்பு தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் புண்ணியமூர்த்தி தங்கராஜ் கூறுகையில் பத்து காஜாவில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளின் ஒன்றாக மகிழம்பு தமிழ்ப்பள்ளி திகழ்வதாக குறிப்பிடுகிறார்.
இப்பள்ளி, 55 லட்சம் ரிங்கிட் செலவில் 12 வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறைகள் என 20 அறைகளை கொண்டு மூன்று மாடிகளில் கட்டப்பட்டுள்ளன. முந்தைய அரசாங்கம் வழங்கிய மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மானிய உதவியுடன் கட்டப்பட்ட இப்பள்ளிக்கு இன்னும் 2 லட்சத்து 80 ஆயிம் ரிஙகிட் நிலுவையில் உள்ளது. அதனை செலுத்துவதற்கு நடப்பு மடானி அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துள்ளோம்.
அனைத்துப்பள்ளிகளுக்கும் முன்னுரிமை வழங்கி வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் தாங்கள் விண்ணப்பித்த தொகையை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.அத்தொகை விரைந்து கிடைத்தால் எஞ்சியத் தொகையையும் செலுத்தி விட முடியும் என்று புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.
370 மாணவர்களுடன், 23 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியுடன் 12 ஆண்டுகள் தொடர்பில் உள்ளேன். எல்.பி.எஸ். தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளேன்.
இந்த மகிழம்பு தமிழ்ப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு உணவு வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திய போதிலும் மடானி அரசாங்கம் தொடர்ந்து உதவுமென்றால் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய நிலை இருப்பதாக புண்ணிய மூர்த்தி கூறுகிறார்.

பிரேம்குமார் பாஸ்கரன்
ஈப்போ, சிலிபின் சாலையில் உள்ள செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிரேம்குமார் பாஸ்கரன் கூறுகையில், தங்கள் பள்ளியின் மேலாளர் வாரியத்திற்கு இரு முறை வழங்கப்பட்ட தலா 70 ஆயிரம் ரிங்கிட் மூலம் இரு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார்.
செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளி பெண்கள் பயிலும் பள்ளியாகும். பள்ளியில் தரமான சுகாதார வசதிகளுடன் இரு கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டதாக பிரேம்குமார் குறிப்பிடுகிறார். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை முதல் படிநிலை மற்றும் நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை இரண்டாவது படி நிலை என இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு, நவீனமயமான உபகரணங்ள் பொருத்தப்பட்டுள்ளதாக பிரேம்குமார் விளக்கினார்.
பழைய கட்டட வசதியினால் கறையான் பிரச்னைக்கு தீர்வுகாணவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையும் பிரேம்குமார் சுட்டிக்காட்டினார்.
பள்ளியின் மேலாளர் வாரியத்தின் மூலமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நிறைய தமிழ்ப்பள்ளிகளில் கல்விச்சூழல் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கம் வழங்கி வருகின்ற மானியம், தமிழ்ப்பள்ளிகளின் மேன்மைக்கும், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்திகொள்வதற்கும் பெரும் துணையாக உள்ளன என்று பள்ளியின் பெரும்பாலான பொறுப்பாளர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.