டிச. 29-
ஜோகூர், மெர்சிங் பகுதியில் Jemaluang-Kahang சாலையில் 26 வது கிலோ மீட்டரில் உள்ள ஒரு காரின் பின்பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக மெர்சிங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் Abdul Razak Abdullah Sani தெரிவித்தார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல் த்ய்றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பு நிற புரோட்டான் வாஜா காரை கண்டுபிடித்தனர். பின்னர், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 33 வயது ஆணையும் 35 வயது பெண்ணையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் இந்த வழக்கைத் தீர்த்துள்ளனர். முன்னதாக, ஈக்கள் மொய்க்கும் நிலையில் ஒரு கார் சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக முகநூலில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.