கோலாலம்பூர், ஜன.6-
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு கோலாலம்பூர் வந்து சேர்ந்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமரும், அவரின் தலைமையிலான பேராளர்கள் குழுவினரும் இன்று மாலை 6.15 மணியளவில் வர்த்தக சேவை விமானத்தின் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் பூங்காராயா வளாகத்தில் சிங்கப்பூர் பிரதமருக்கு, கேப்டன் இஸ்கண்டார் சுல்கர்னேன் டோ ஹசான் தலைமையில் அரசப் பட்டாளத்தின் முதலாவது பிரிவு வீரர்கள் மரியாதை அணிவகுப்பை வழங்கினர்.
தமது துணைவியார் லூ சே லுய்யுடன் வருகை புரிந்துள்ள சிங்கப்பூர் பிரதமரை உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதீர் வரவேற்றார்.
கடந்த ஆண்டு மே 15 ஆம் தேதி சிங்கப்பூர் பிரதமராக பொறுப்பேற்றது முதல் லாரன்ஸ் வோங், மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள இரண்டாவது வருகை இதுவாகும்.