கோலாலம்பூர், ஜன.6-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், தமது எஞ்சிய சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக இன்று அப்பீல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த அரசாணை உத்தரவு விவகாரத்தை மறைத்தது யார் என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் கேட்டுக்கொண்டுள்ளார்.
நஜீப்பின் சிறைத் தண்டனை காலத்தையும், அபராதத் தொகையையும் குறைப்பது தொடர்பில் இரண்டு கடிதங்கள் உள்ளதாக அண்மையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்து இருந்தார். ஆனால், அரசாணை உத்தரவு குறித்து அவர் விளக்கவில்லை என்று அக்மால் குறிப்பிட்டார்.
அரசாணை உத்தரவு விவகாரத்தை மறைப்பதற்கு யார் பொறுப்புதாரி என்பதை அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அக்மால் கேட்டுக்கொண்டார்.