கோலாலம்பூர், ஜன.7-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பகாங் அரண்மனையின் அரசாணை உத்தரவு இருப்பதாக கடிதம் அம்பலப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து இவ்விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டியதில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் இதுநாள் வரை மூடி மறைக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டிய போதிலும் இதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை குற்றஞ்சாட்டுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி.யும் சட்ட வல்லுநரான ஹசான் அப்துல் கரீம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்திற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று இருப்பவர்கள் சட்டத்துறை தலைவர் அல்லது சட்டத்துறை அலுவலகமே தவிர பிரதமர் அல்ல என்று அந்த சட்ட வல்லுநர் தெளிவுபடுத்தினார்.
மாமன்னர் தலைமையில் கூடிய பொது மன்னிப்பு வாரியம் எடுக்கக்கூடிய முடிவுகள், ரகசியமானதாகும். அந்த முடிவுகளின் உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கு பொறுப்பேற்று இருப்பவர்கள் சட்டத்துறை தலைவர் அல்லது அவரின் ஏஜெண்டுகளாகும்.
நஜீப் தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு நாட்டிற்கு தலைமையேற்ற 16 ஆவது மாமன்னரான சுல்தான் அ ப்துல்லா ஒரு கூடுதல் உத்தரவுக்காக அரசாணை ஒன்றை பிறபித்துள்ளார் என்பது நேற்று அப்பீல் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டியவர்கள் சட்டத்துறை அ லுவலகமே தவிர பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அல்ல என்று ஹசான் அப்துல் கரீம் விளக்கினார்.