ஜன.9-
ஜோகூர்பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சியைக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.
அந்த உணவக கட்டட வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவின் மூலம் சுடப்பட்ட காட்சி அம்பலமாகியுள்ளது.
தலைக்கவசத்துடன், தோளில் ஒரு கைப்பேக்குடன் நீல நிற சட்டையும், காற்சட்டையும் அணிந்திருந்த ஓர்ஆடவர், இந்த கொடூர செயலைப் புரிந்துள்ளார் என்பது தெரியவந்தது.
தனது நண்பர்களுடன் உணவருந்திக்கொண்டு இருந்த உள்ளூரைச் சேர்ந்த 40 வயது நபர், தனது கைப்பேசிக்கு வந்த ஓர் அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக இருக்கையை விட்டு எழுந்து, உணவக வளாகத்தில் நடமாடிக்கொண்டு கைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று பின்புறமாக ஓடி வந்த அந்த சந்தேகப் பேர்வழி, கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்த நபரை சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் செல்லும் காட்சி, அந்த காணொளியில் தெரியவந்துள்ளது.
அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்த அந்த நபர் 7 முறை சுடப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் அவரின் உடலில் நான்கு இடங்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.