ஜன.17-
மடானி அரசாங்கம், நாட்டிற்கு தலைமையேற்ற இந்த இரண்டு ஆண்டு காலத்தில் இந்தியர்களின் சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ரா மூலமாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் 100 மில்லியன் ரிங்கிட், உதவித் தேவைப்படக்கூடிய இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்பிற்கு பிரதான பங்களிப்பை வழங்கி வருகிறது.
பி40 தரப்பினர் உட்பட சாமானிய இந்தியர்களுக்கு உதவுவதிலும், வழிகாட்டுவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் மித்ராவின் உதவித் திட்டங்கள் யாவும் இலக்குக்குரிய மக்களை சென்றடைந்து வருகிறது.
கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், இந்தியர்களுக்காக மித்ரா மூலமாக 100 மில்லியன் ரிங்கிட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, முழுமையாக இந்திய சமுதாயத்தை சென்றடையும் என்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு சாட்சியாக விளங்குகிறது. குறிப்பாக, இந்த 100 மில்லியன் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டில் சமுதாயம் பயன்பெறும் வகையில் 14 வகையான ஊக்கத் திட்டங்களை மித்ரா அமல்படுத்தியிருக்கிறது என்று மித்ராவிற்கு பொறுப்பேற்றுள்ள அதன் சிறப்புப்பணிக்குழுவின் தலைவர் பி. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த 14 திட்டங்களில் 11 திட்டங்களுக்கு இதுவரை 9 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 075 ரிங்கிட் ( RM 95,482,075 ) அங்கீகரிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரபாகரன் குறிப்பிடுகிறார்.
இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்தின் சமூகவியல், பொருளாதாரத்தை முழுமையாக பலப்படுத்தும் முயற்சியில் முழு கவனம் செலுத்தப்பட்டு, அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.
மித்ரா மூலமாக அமல்படுத்தப்படும் இத்திட்டங்கள் யாவும் உதவி தேவைப்படக்கூடிய இந்திய சமுதாயத்தின் பொருளாதாரம், தொழில் வாய்ப்பு, சமூக நலன் மற்றும் சமூகவியல் உட்பட அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
சாலைப்போக்குவரத்து இலாகாவான JPJ- வினால் அங்கீகரிக்கப்பட்ட வாகனமோட்டும் பயிற்சி மையங்களுடன் மித்ரா இணைந்து, Program Bantuan Lesen Lori Good Driving License ( GDL ) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக பி40 பிரிவைச் சேர்ந்த 654 இந்திய இளைஞர்கள் லோரி ஓட்டுவதற்கான Kelas E Full ( Kejur ) மற்றும் Kelas E Full ( Bersendi ) ஆகிய வாகனமோட்டும் உரிமங்களை பெறும் பொருட்டு இந்த பயிற்சித் திட்டத்தை மித்ரா முன்னெடுத்துள்ளது.
சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ தொழில் பயிற்சி சான்றிதழ் திட்டமான Program Latihan dan Penempatan Sijil Profesional Keselamatan Siber Ec-Council திட்டத்திற்கு 3.4 மில்லியன் ரிங்கிட்டும், பங்குச் சந்தை முதலீடு மற்றும் வணிகத் திட்டடமான Programe Stock Market Investment and Trading- கிற்கு 3.05 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும், மலேசியா – சீனா இளையோர் டிவேட் பயிற்சியான Program Malaysia – China Youth TVET Training திட்டத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இதில் Program Stock Market Investment and Trading திட்டமானது, மலேசிய பங்குச் சந்தை ஒத்துழைப்புடன் நிதி நிர்வாகம் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சி வாயிலாக இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், நிதி மற்றும் பங்குப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை பெற்று, நிதி நிர்வாகத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு உதவும் திட்டமாகும்.
இதேபோன்று MISI எனப்படும் மலேசிய இந்தியர் திறன் பயிற்சியான Program Malaysian Indian Skill Initiative திட்டத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட்டும், மலேசிய இந்திய சமூக தொழில் முனைவோருக்கான Malaysian Indian Community Entrepreneurship திட்டத்திற்கு ஒரு கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 400 ரிங்கிட்டும் ( RM 12,326,400 ) ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த இளையோர்கள் ஒரு குறிகோளுடன் தங்களுக்கென்று ஒரு தொழில்துறையை ஏற்படுத்திக்கொள்வது அல்லது இருக்கின்ற தொழில்துறையை மேலும் அபிவிருத்திக்கொள்வதற்கு மலேசிய இந்திய சமூக தொழில் முனைவோருக்கான திட்டம் மிகுந்த நன்மையைத் தர வல்லதாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
MISI எனப்படும் மலேசிய இந்திய சமூக தொழில் முனைவோருக்கான திட்டத்தின் வாயிலாக மித்ராவின் இலக்கு எந்த அளவிற்கு இந்திய சமுதாயத்தின் அடிதட்டு மக்களை சென்றடைந்துள்ளது என்பதற்கு கீழ் கண்டவர்கள் அளித்த நேரடி நேர்காணல் ஓர் சிறந்த உதாரணமாகும்.
மீன் வளர்ப்பில் சரஸ்வதி சரவணன்

மித்ராவில் தமக்கு வழங்கப்பட்ட பத்தாயிரம் ரிங்கிட் உதவித்தொகை தங்களின் வாழ்க்கைசூழலை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாக கூறுகிறார் பேரா, கோப்பெங், தாமான் கிந்தா பாருவைச் சேர்ந்த 30 வயது சரஸ்வதி சரவணன்.
தங்கள் வீட்டிலிருந்து சுமார் 25 நிமிட மோட்டார் சைக்கிள் பயணத் தூரத்தில் அருகில் உள்ள கோத்தாபாருவில் பயன்படுத்தப்படாத ஈயக்குட்டையில் தமது கணவன் சரவணன் கடந்த 20 ஆண்டு காலமாக மீன்வளர்ப்புத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக சரஸ்வதி கூறுகிறார்.
சிம்பாங் பூலாயில் உள்ள சுண்ணாம்பு தொழில்சாலையில் தமது கணவர் வேலை செய்து வந்த போதிலும் மீன் வளர்ப்புத்தொழில் தங்களின் பொருளாதாரத்திற்கு பெரும் உந்தும் சக்தியாக இருந்ததாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான சரஸ்வதி கூறுகிறார்.
சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மீன்கள் வளர்க்கும் அளவிற்கு தங்களின் பெரிய குளத்தின் பரப்பளவு இருந்த நிலையில் மூன்று மாதத்திற்கு அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை மூன்று நான்கு டன் எடைக்கொண்ட மீன்களை விற்பது மூலம் சராசரி 20 முதல் 25 ஆயிரம் வெள்ளி வரை வருமானத்தைப் பார்க்க முடிந்தது.
ஆனால், 2020 ஆம் ஆண்டு கோவிட் 19 காலத்தில் தங்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்திய ஆண்டு என்றுகூட சொல்லலாம். மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் தாண்டுவதில் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருந்ததால் மீன்களை விற்கும் தருணத்தில் போடப்பட்ட இந்த கடுமையான கட்டுப்பாடுகளினால் மீன்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டதாக சரஸ்வதி விவரித்தார்.
அப்படியே மீன்களை வாங்குவதாக இந்தாலும் மீன் வாங்கும் மொத்த வியாபாரிகள், அவர்களை சார்ந்தவர்களிடம்தான் மீன்களை வாங்க ஆர்வமாக இருந்தனர். இதனால் தங்களின் மீன்களை விற்க முடியாமல் கிட்டத்தட்ட மூன்று, நான்கு ஆண்டுகள் பெரும் சிரமத்திற்கு தங்கள் குடும்பம் ஆளாகியதாக சரஸ்வதி விவரித்தார்.

கணவரின் வருவாய் மட்டுமே வாழ்க்கை ஜீவாதாரத்திற்கு உதவியது. கடும் பொருளாதார நெருக்கடியில் பிள்ளைகளை டியூஷனக்கு அனுப்புவது முற்றாக நிறுத்தப்பட்டது. இதர அத்தியாவசிய தேவைகள் கூட குறைத்துக்கொள்ளப்பட்டது.
ஒரு சிரமமான சூழலில் தங்கள் குடும்பம் இருந்த வேளையில் பேரா இந்திய வர்த்தக தொழில் சபை மூலமாக மித்ரா வழங்கிய மூன்று மாத கால பயிற்சி, மற்றும் இதர மூன்று மாத நடைமுறைப்பயிற்சிகள் மீன்களை வர்த்தக ரீதியாக அவற்றின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது, நிதி நிர்வாகத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வது, மூலத்தனத்திற்கு பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது முதலிய விஷயங்களை இந்த பயிற்சிகளின் வாயிலாக கற்றுக்கொள்ள முடிந்தது.
அதேவேளையில் இதர மூன்று மாத நடைமுறை பயிற்சியின் வாயிலாக மீன்களை தொழில்ரீதியாக வளர்க்கும் முறையை அறிந்துக்கொள்ள முடிந்தது. மித்ரா வழங்கிய பத்தாயிரம் ரிங்கிட் உதவித் தொகையின் மூலம் 6 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் 5 வகையான 7 ஆயிரம் மீன்குஞ்சுகளை வாங்கி, குளத்தில் விட முடிந்தது.
மீன்களுக்கு தீனியாக மாதத்திற்கு மூன்று முறை கோழி சாணத்தை வாங்கி, லோரி மூலம் குளத்திற்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு லோரி வருவதற்கான பாதையை சரி செய்வதற்கு 2 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்பட்டது. இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் மீன்கள் பெரியதாகி விற்கப்படும் போது குறைந்தது 20 ஆயிரம் ரிங்கிட் முதல் 30 ஆயிரம் ரிங்கிட் வரை நல்ல வருமானத்தை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சரஸ்வதி சரணவன் கூறுகிறார்.
பத்திரிகை விநியோகத்தில் திவ்யா

பேரா, கோப்பெங் பட்டணத்தைச் சேர்ந்த திவ்யா ராஜசேகரன் கூறுகையில் தன்னைப் போல் நம்பிக்கையுடன் உயர்வதற்கு மித்ராவின் உதவிகள் மற்ற இந்தியர்களையும் சென்றடைய வேண்டும் என்கிறார்.
பத்திரிகை விநியோகிப்பில் கடந்த 45 வருடமாக ஈடுபட்டு வரும் தமது தந்தையுடன் கடந்த 11 ஆண்டுகாலாமாக பத்திரிகை விநியோகிப்பில் கணக்கு விபரங்களை கவனித்துக் கொள்வதாக 31 வயது திவ்யா கூறுகிறார்.
கோப்பெங் வட்டாரத்தில் “சன்பாய்” என்ற நிறுவனத்தை தோற்றுவித்து தமது தந்தை தொடங்கிய தொழிலை அவருக்கு உதவியாக தற்போது தமது அண்ணன் கவனித்து வருவதாக திவ்யா குறிப்பிடுகிறார்.
கணக்கு விபரங்களை உள்ளங்கையில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் சிறு வயது முதல் தமக்கு இருந்ததால் தந்தைக்கும், சகோதரருக்கும் உதவியாக பத்திரிகை விநியோகிப்பைக் கவனித்துக்கொள்வதாக அறுவர் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திவ்யா கூறுகிறார்.
கடந்த ஆறு மாத காலம் மித்ரா வழங்கிய பயிற்சி திட்டத்தில் நிறைய விஷயங்களை தாம் அதிகமாக கற்றுக்கொள்ள முடிந்ததாக திவ்யா குறிப்பிடுகிறார்.
குறிப்பாக நிதி நிர்வகிப்பு, அதனை கையாளும் முறை, சொந்தமாக தொழிலை எவ்வாறு தொடங்குவது, தொழிலை எவ்வாறு நிபுணத்துவ முறையின்படி நிர்வகிப்பது முதலிய விவரங்களை மித்ரா வழங்கிய பயிற்சியின் மூலம் அதிகமாக அறிந்து கொள்ள முடிந்ததாக திவ்யா கூறுகிறார்.
மித்ரா வழங்கிய பயிற்சி மற்றும் வழங்கி பத்தாயிரம் வெள்ளி உதவித் தொகை மூலமாக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் என் சகோதரரிடமிருந்து தனியாக பிரிந்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவி, பத்திரிகை விநியோகிப்பில் ஈடுபடும் அளவிற்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருப்பதாக திவ்யா கூறுகிறார்.

குறிப்பாக அந்த பத்தாயிரம் ரிங்கிட்டை பத்திரிகைகள் வாங்குவதற்கு முன்பணமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கோப்பெங் வட்டாரத்தில் 13 பெட்ரோனாஸ் நிலையங்கள் மற்றும் அருகில் உள்ள உயர் கல்விக்கூடங்களில் பத்திரிகை விநியோகிப்பில் தாங்கள் ஈடுபட்ட போதிலும் தொடக்கக் கட்டமாக மூன்று பெட்ரோனாஸ் நிலையங்கள் மற்றும் மூன்று “மார்ட்” வடிவிலான வர்த்தகத் தலங்களில் பத்திரிகை விநியோகிப்பில் ஈடுபடும் தன்னம்பிக்கையை தற்போது தமக்கு மித்ரா ஏற்படுத்தியுள்ளதாக திவ்யா கூறுகிறார்.
அதேவேளையில் இது போன்ற சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பயிற்சித்திட்டங்கள் இதர இந்தியர்களுக்கும் மித்ரா தொடர வேண்டும். இந்த பயிற்சியை மித்ரா மூலமாக ஏற்பாடு செய்த பேரா மாநில இந்தியர் வர்த்தக, தொழில் சபைக்கும், அதன் முதல் நிலை அதிகாரி இந்திராவுக்கும் இவ்வேளையில் நன்றி கூட தாம் கடமைப்பட்டுள்ளதாக திவ்யா குறிப்பிடுகிறார்.
லியானா காயத்ரி கிரீஸ்
குயிஸ்ட் இண்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறை பட்டதாரியான ஈப்போ, பெர்ச்சாமை சேர்ந்த லியானா காயத்ரி கிரீஸ் கூறுகையில், மித்ரா வழங்கிய 6 மாத கால பயிற்சி, சொந்தமாக ஒரு மழலையர் பள்ளியை தொடங்கும் அளவிற்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடுகிறார்.
எஸ்.பி.எம். கல்வியை முடித்தப்பின்னர் ஹோம் டியூஷன் நடத்திய போது, மாணவர்கள் சரியான உச்சரிப்பை கொண்டிருக்காததற்கு காரணத்தை ஓர் ஆய்வு செய்த போது, மழலையர் பள்ளியில் மலாய் மொழி வார்த்தைகளை உடைத்துச்சொல்லும் Sukukata பயிற்சியில் போதுமான திறன்பெறவில்லை என்பதை அறிந்து கொண்டேன்

எனவே மித்ரா வாயிலாக தொழில்முனைவோர் பயிற்சியில் கலந்து கொண்டது மூலம் 3 மாத காலம், வாரத்திற்கு ஐந்த நாள் வீதம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அடிப்படை பயிற்சியில் பங்கு கொண்டேன். பின்னர் நடைமுறை பயிற்சிக்கு ஈப்போவில் உள்ள இனோவாசி மேவா தஸ்கா மழலையர் பள்ளிக்கு மூன்று மாத காலம் பயிற்சிக்கு மித்ரா மூலம் அனுப்பப்பட்டேன்.
இந்த மித்ரா பயிற்சித் திட்டத்தின் வாயிலாக ஒரு மழலையர் பள்ளியை நடத்துவதற்கு என்னென்ன அடிப்படை தேவைகள் என்பதை அறிந்து கொண்டேன். மித்ரா வழங்கிய பத்தாயிரம் ரிங்கிட் உதவித் தொகையை பயன்படுத்தி சொந்தமாக ஒரு மழலையர் பள்ளியைத் தொடங்கப் போகிறேன் என்று 25 வயதான லியானா காயத்ரி கிரிஸ் கூறுகிறார்.
புவனேஸ்வரன் ரகுமங்கத்தன்
மித்ரா வழங்கிய 6 மாத கால பயிற்சி மற்றும் வழங்கிய பத்தாயிரம் ரிங்கிட் ஆகியவற்றை பயன்படுத்தி தாமும் சொந்த மழலையர் பள்ளி ஒன்றைத்தொடங்கப் போவதாக கூறுகிறார் ஈப்போ, உலு கிந்தா, தாமான் பெர்பாடுவானைச் சேர்ந்த புவனேஸ்வரன் ரகுமங்கத்தன்.
கணக்கியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவரான 25 வயது புவனேஸ்வரன், மித்ரா வழங்கிய பயிற்சியின் மூலம் தாம் கற்ற கல்வி சொந்த தொழிலுக்கு பயன்பெற வேண்டும் என்ற ஒரு தெளிவுரைக்கு வந்ததாக கூறுகிறார்.

எஸ்.பி.எம். மாணவர்களுக்கு டியூஷன் கற்றுக்கொடுத்து வருவதாக கூறும் புவனேஸ்ரன், மித்ரா வழங்கிய பயிற்சி மற்றும் பத்தாயிரம் ரிங்கிட்டை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஈப்போ, பெர்ச்சாம், பண்டார் பாரு புத்ராவில் ஒரு மழலையர் பள்ளியைத் தொடங்குவதற்கான கட்டமைப்பு வேலைகளை தொடங்கிவிட்டதாக கூறுகிறார்.
இந்த பத்தாயிரம் வெள்ளியை கொண்டு, மாணவர்கள் பயில்வதற்கு நாற்காலி, மேசைகள், வைட்போர்ட் உட்பட இதர உபகரணங்களை வாங்குவதற்கு செலவிட்டுள்ளதாக புவனேஸ்வரன் கூறுகிறார்.

கல்வித்துறை பின்னணியை தாம் கொண்டிருந்தாலும் தேர்ந்தெடுக்கக்கூடிய துறையில் அடிப்படை விஷயங்களை அறிந்துக்கொண்டு, நம்முடைய ஆளுமையை உயர்த்திக்கொண்டால் எந்த தொழிலிலும் சிறக்க முடியும் என்பது மித்ரா பயிற்சி திட்டத்தின் தாரக மந்திரமாகும். நிச்சயம் இந்த தொழிலில் உயர முடியும், அடுத்தக் கட்டநிலைக்கு செல்லா முடியும் என்ற புதிய தெம்பை மித்ரா ஏற்படுத்தி தந்துள்ளதாக புவனேஸ்வரன் கூறுகிறார்.
ஸ்டால் கடை அமைப்பதில் சீத்தா பாலசந்திரன்
உணவு ஸ்டால் கடையை நடத்துவது மூலம் தொழில்துறையில் மிளிர முடியும் என்கிறார் ஈப்போ, லஹாட் மைன்ஸை சேர்ந்த சீத்தா பாலசந்திரன். அந்த அளவிற்கு மித்ராவின் தொழில்முனைர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பாட முறைகள் அமைந்து இருந்தன என்று 33 வயது சீத்தா பாலசந்திரன் கூறுகிறார்.

சிங்கப்பூர், ஜோகூர் போன்ற இடங்களில் திடீர் உணவகங்களை வேலை செய்த அனுபவம் இருப்பதால் தாம் கற்ற வேலைகள் மூலம் ஒரு சொந்த தொழில் செய்ய முடியுமா? என்று ஏங்கியிருந்த நிலையில் மித்ரா வழங்கிய பயிற்சிகள் மற்றும் பத்தாயிரம் ரிங்கிட் உதவித் தொகை அந்த கனவை நிறைவேற்றி வருவதாக சீத்தா குறிப்பிடுகிறார்.
முதலில் தங்களுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால அடிப்படை பயிற்சியானது, நிதி நிர்வாக முறைகள் குறித்து அதிகமாக கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை மித்ரா ஏற்படுத்தியதாக சீத்தா கூறுகிறார்.
உணவுத் தயாரிப்பில் நாம் எத்தகைய சிறந்த வல்லுநர்களாக விளங்கிய போதிலும் வர்த்தகம் என்று வரும் போது நிதி நிர்வகிப்பு தெரியவில்லை என்றால் எந்த தொழிலிலும் சோபிக்க முடியாது.
அந்த வகையில் நிதி நிர்வகிப்பு, வியாபாரம் என்றால் என்ன, அதனை கையாள வேண்டிய அணுகுமுறைகள் முதலிய விபரங்கள் மித்ரா பயிற்சித் திட்டம் தங்களுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது என்று சீத்தா குறிப்பிடுகிறார்.
எத்தனை வர்த்தகங்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கில் லஹாட் வட்டாரத்திலேயே ஒரு ஸ்டால் உணவு கடையை திறப்பதற்கு முடிவெடுக்கும் அளவிற்கு மித்ரா பெரும் துணை புரிந்துள்ளதாக சீத்தா கூறுகிறார்.
இத்திட்டம் மட்டுமின்றி மித்ராவின் இதர திட்டங்களும் சமுதாயத்திற்கு ஆக்கப்பூர்வான பங்களிப்பை வழங்கி வருகிறது.
மழலையர் தொடக்க கல்வித் உதவிகள்
தனியார் மழலையர் தொடக்கக்கல்வி உதவித்தொகை திட்டமான Program Subsidi Pendidikan Awal Tadika Swasta- திட்டத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி40 தரப்பைச் சேர்ந்த இந்திய குடும்பங்களின் 4 க்கும் 6 க்கும் இடைப்பட்ட வயது சிறார்கள் தங்களின் மழலையர் கல்வி வாய்ப்பை இழந்து விடாமல் இருப்தை உறுதி செய்யவும், அத்தகைய குடும்பங்களுக்கு ஏற்படும் கல்விச்செலவின சுமையை குறைக்கும் நோக்கிலும் 4,545 மாணவர்களை இலக்காக கொண்டு 186 மழலையர்கள் பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
உயர்கல்விக்கூடத்திற்கு செல்ல தகுதி பெற்றுள்ள இந்திய மாணவர்கள் குறிப்பாக, இளங்கலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா பயிலும் பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முதலாம் ஆண்டில் ஏற்படக்கூடிய கல்வி நிதிச்சுமையை குறைப்பதற்கு ஒரு முறை வழங்கக்கூடிய தலா 2 ஆயிரம் ரிங்கிட்டும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட்டும் தொடக்க நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த IPT MITRA-வின் IPT 4.0 MITRA திட்டத்திற்கு 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டையலிசியஸ் நோயாளிகளுக்கு உதவி
இத்திட்டங்களை தவிர சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு டையசிலியஸ் சிகிச்சையை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு டையலிசியஸ் உதவித் தொகைக்கு 8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட டயாலிசிஸ் மையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்ற பி40 மற்றும் எம்40 இந்திய சமூகத்தைச் சேர்ந்த 800 சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை குறைப்பதற்கு அவர்களுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மித்ராவின் Program Bantuan Sinar Cahaya Mitra திட்டத்திற்கு 15.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சினார் சஹாயா மித்ரா திட்டமானது, திடீரென்று உடல் நலிவுற்றுதல் அல்லது பொருளாதார பின்னடைவு காரணமாக பாதிக்கப்படும் பி40 மற்றும் எம்.40 பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்கு YKN எனப்படும் தேசிய சமூக நல அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் அவர்களின் பொருளாதாரப் பிரச்னையை கையாளுவதாகும்.
தவிர இயற்கை பேரிடரில் ஏற்படக்கூடிய பாதிப்பு தங்கியிருக்கும் வீட்டில் ஏற்படக்கூடிய பாதிப்பை சீர்செய்யுதல், ஈமச்சடங்கை நடத்துவதற்கு உதவுதல் முதலிய உதவிகளுக்கு 14,330 இந்தியர்களை இலக்காக கொண்டு சினார் சஹாயா மித்ரா திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கான சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்திற்கு ( Program Kesedaran Keselamatan Siber ) RM 3,705,675 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆக ஒட்டுமொத்தத்தில் 2025 பட்ஜெட்டில் மித்ராவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு, முழுக்க முழுக்க இந்திய சமுதாயத்தின் வளர்ச்சித்திட்டங்களையும், அவர்களின் மேன்மையையும் கொண்டு வர வல்லதாகும் என்பதற்கு துணிந்து கூறலாம்.