ஜன.13-
மலேசிய சாலை போக்குவரத்து துறை – JPJ நாடு முழுவதும் உள்ள 37 புஸ்பாகோம் மையங்களில் சிறப்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சாலை போக்குவரத்து சட்டத்தை மீறிய 21 கனரக வணிக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் போலியான உரிமமும் பதிவு செய்யப்படாத வாகன பயன்பாடும் கண்டறியப்பட்டன. மேலும் சில வாகனங்கள் புஸ்பாகோமால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கவில்லை என்பதும் தெரியவந்ததாக JPJவின் தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.
புஸ்பாகோம் மையங்களில் வாகன சோதனை முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து JPJ விசாரணை நடத்தி வருகிறது. சாலை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சாலை விபத்துக்களை குறைப்பதற்காகவும் JPJ தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று Aedy Fadly Ramli குறிப்பிட்டார்.