ஜன.13-
ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் SPMஐ முடிக்காமல் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தும் பிரச்சனையைத் தீர்க்க இடைநிலைக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கொள்கையை மலேசிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கொள்கை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், SPM தேர்வில் மலாய் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை குறித்த இறுதி முடிவுகள் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
தேவை ஏற்பட்டால், பாலர் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளி உதவி நிதி திட்டத்தை விரிவுபடுத்த அரசு பரிசீலிக்கும் என்றும் Fadhlina Sidek கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 5.2 மில்லியன் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் 150 ரிங்கிட் உதவித்தொகை பெறுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றார்.