ஜன.15-
உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்கள் 2008-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையான 10 கிலோவுக்கு 26 ரிங்கிட் என்ற விலையில் அரிசி விற்பனை செய்வதில் சிரமம் இருப்பதாக புகார் அளித்ததால், கலப்பு அரிசி விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. நெல், அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தில் இதற்குத் தடை இல்லை என்றும், மலேசிய போட்டித்தன்மை ஆணையமான MyCC இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார். கலப்பு அரிசி விற்பனைக்கு அனுமதி அளிப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதே நேரத்தில் அதிக அரிசி விலையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று வழிகள் ஆராயப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச நெல் கொள்முதல் விலை 1,300 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும் என்றும், அதிகபட்ச விலையில் அரசாங்கம் தலையிடாது என்றும் அவர் கூறினார். இதன் மூலம், நெல் கொள்முதலில் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும் பயனீட்டாளர்களும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுவதாக முகம்மட் சாபு தெரிவித்தார்.