ஜன. 16-
ஆசியான் இலக்கவியல் அமைச்சர்களூக்கு இடையிலான முக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் மலேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்துகொள்கிறார்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் நிர்வாகம், ஆசியான் நாடுகளுக்கிடையிலான எல்லை கடந்த தரவு பகிர்வு பாதுகாப்பு திட்ட வரைவு, இலக்கவியல் வாணிகம், இலக்கவியல் பொருளாதரம் என முக்கிய அம்சங்கள் குறித்து இக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருக்கிறது.

‘பாதுகாப்பான புத்தாக்கம், ஆசியானின் இலக்கவியல் துறை வெற்றியை உறுதிச் செய்யும்’ என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இலக்கவியல் வணிகத்தில், மலேசியா ஆசியான் நாடுகளின் முன்னோடியாகத் திகழ, இந்தக் கூட்டம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியானின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தவும், AI-உந்துதல், எதிர்காலத்திற்குத் தயாராகுவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர் கோபிந்த் கூறினார்.
சைபர் பாதுகாப்பு, AI பாதுகாப்பு மற்றும் தரவு மைய உள்கட்டமைப்பு பற்றிய விவாதங்களை நடத்துவதில் மலேசியாவின் பங்கு விளக்கப்பட்டு இருப்பதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.