ஜன. 16-
இந்நாட்டின் தேசிய நீரோடையில் எந்தவொரு சமூகமும் ஓரங்கட்டப்படவில்லை அல்லது ஓரங்கட்டப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி மொழி தந்துள்ளதாக ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
அனைத்து சமூகங்களும், நேசத்திற்குரிய மலேசிய மக்களின் ஓர் அங்கமாகும். அவர்களை அனைவரையும் அரவணைத்து செல்வதே டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான நடப்பு அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று சரஸ்வதி குறிப்பிட்டார்.

இன்று மாலை 4 மணியளவில் கோலாலம்பூர், செள கிட், எண்.46 A, lorong Haji Taib 1 இல் மலேசிய பொது சுகாதார மற்றும் சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் துணை அமைச்சர் சரஸ்வதி மேற்கொண்டவாறு கூறினார்.
பொங்கல் விழா, உழைப்பின் உயர்வினை உலகிற்கு உரைத்திடும் அறுவடைத் திருநாள் மட்டுமின்றி மக்களிடையையே ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் நன்னாளாகும். இந்நாளில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் தமது ஒற்றுமை அமைச்சின் பொங்கல் வாழ்த்தினை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தாம் மகிழ்ச்சி கொள்வதாக சரஸ்வதி தெரிவித்தார்.

முன்னதாக, பொங்கல் வைக்கும் நிகழ்விற்கு வருகைப் புரிந்த துணை அமைச்சருக்கு மலர் மாலைத் தூவி ஏற்பாட்டுக்குழுவினர் மகத்தான வரவேற்பை நல்கினர்.
பாரம்பரியப்படி மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்ட .இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அதிகமானோர் கலந்து கொண்டதுடன் நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மயிலாட்டம், ஒயிலாட்டம் என மேளதாள இசையுடன் நிகழ்வுகள் படைக்கப்பட்டன.