ஜோகூர்பாரு, ஜன. 17-
ஜோகூர்பாரு, உலு திராம், ஜாலான் லிமாவ் மானிஸ், கம்போங் டத்தோ பெந்தாராவில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 11 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர்.
வீடொன்று தீப்பிடித்துக்கொண்டதில் அந்த வீட்டில் இருந்த நால்வரில், 12 வயது சிறுவன் உயிர் தப்பினான். அவனை தீயணைப்பு, மீட்புப்படையினர் காப்பாற்றினர்.
தீ நாலாபுறமும் கொழுந்து விட்ட எரிந்த நிலையில் தீயின் ஜுவாலைக்கு மத்தியில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் ஒரு சிறுமி, மூதாட்டி ஒருவர் மற்றும் ஓர் ஆடவர் ஆகிய மூவர் கருகி மாண்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.
63 வயது மூதாட்டி இங் கியோக் சூ, அவரின் 30 வயது மகன் லீ சியூவ் யோங் மற்றும் மூதாட்டியின் 11 வயது பேத்தி சென் சி ஜிங் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
நான்கு தீயணைப்பு இயந்திரங்களுடன் விரைந்த 24 வீரர்கள், கட்டட அமைப்பிலான அந்த வீடு, கிட்டத்தட்ட 80 விழுக்காடு அழிந்து விட்ட நிலையில், அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தியதாக தீயணைப்புப்படை கமாண்டர் முகமட் ஃபைஸ் ரம்லி தெரிவித்தார்.
காயமுற்ற 12 வயது சிறுவன், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹாய்மி இஷாக் குறிப்பிட்டார்.