கோலாலம்பூர், ஜன.17-
தங்களின் விருப்பப்படி தனிநபரின் கைப்பேசியை சோதனையிட முடியும் என்று கூறும் போலீசாரின் வாதம் தவறானதாகும் என்று வழக்கறிஞர் ஒருவர் வாதிடுகிறார்.
தனிநபரின் கைப்பேசியை வாங்கி, போலீசார் சோதனையிட முடியாது. அவ்வாறு சோதனையிட்டால் அது தனிநபர் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிப்பதாகும் என்று வழக்கறிஞர் எஸ். ரவீந்திரன் பதில் அளித்துள்ளார்.
ஒரு நபருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் பல்வேறு விவகாரங்கள் பரிமாறப்பட்டு இருக்கலாம். அதில் அந்த தனிநபரின் வழக்கு தொடர்புடைய கோப்புகளும் இருக்கலாம். அவை ரகசியமானவை மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்நிலையில், ஒருவரின் கைப்பேசியை வாங்கி போலீசார் சோதனையிட முடியும் என்று கூறுவது, அந்த தனிநபரின் சிறப்புரிமைக்கு எதிரான செயலாகும் என்று வழக்கறிஞர் ரவீந்திரன் கூறுகிறார்.
தனிநபர் ஒருவருக்கும், அவரின் வழக்கறிஞருக்கும் இடையிலான உரையாடல் மிக ரகசியமானதாகும். அவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்பட்டிருந்தாலே தவிர மற்றப்படி விருப்பம் போல் கைப்பேசியை சோதனையிடுவதற்கும், ரகசியங்களை அறிய முற்படுவதற்கும் 1950 ஆம் ஆண்டு சாட்சிய சட்டம் 126 ஆவது பிரிவு தடை செய்வதாக ரவீந்திரன் தெளிவுபடுத்தினார்.