கோலாலம்பூர், ஜன. 17-
சில நிதி நிறுவனங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகளுடன் நிதி ஆலோசனை நிறுவனம் சம்பந்தப்பட்ட 700 மில்லியன் ரிங்கிட் கடன் சட்டவிரோதமாக அரசாங்க ஊழியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய மோசடி தொடர்பில் இதுவரையில் நான்கு ஆயிரம் கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இந்த மோசடிக் கும்பலின் செயல், வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஓப் ஸ்கை சோதனை நடவடிக்கையின் மூலம் கடந்த திங்கட்கிழமை முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் 12 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 24 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.
இதில் மொத்தம் 16 வங்கி அதிகாரிகள் மற்றும் நிதி ஆலோசகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.