பினாங்கு, ஜன. 17-
நோயிலிருந்து விடுபட்ட ஒரு மாநிலமாக பினாங்கை உருவாக்கும் வகையில் மக்களின் உடல் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பிசியோதெராபி இயந்திரங்கள் பெறப்பட்டு இருப்பதை பினாங்கு முன்னாள் முதலமைச்சரும் பகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.
ஜெர்மன், Elvation-னிடமிருந்து PiezoWawe2 Touch Focus Shockwawe எனும் மூன்று இயந்திரங்கள் பெறப்பட்டுள்ளதாக செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய லிம் குவான் எங் இதனை தெரிவித்தார்.
உயரிய தொழில்நுட்பத்தைக்கொண்ட இந்த பிசியோதெராபி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடையதாகும். இந்த இயந்திரங்கள், பினாங்கு பெரிய மருத்தவமனையிலும், ஆயர் ஹீத்தாம் சுகாதார அமைச்சின் கிளினிக்கிலும் பொருட்படுத்தப்படும். வரும் மார்ச் மாதம் இவை முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
மலேசியாவில் மூத்தக்குடிமக்கள் அதிமாக கொண்ட மாநிலமாக பினாங்கு விளங்குவதால் பொருத்தமான நேரத்தில் இந்த சாதனங்கள் அறிமுக்கப்படுத்தப்படவிருக்கின்றன. எலும்புமூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால் ஊசி, மருந்துகள் பயன்படுத்தாமலேயே பிசியோதெராபி சிகிச்சையின் மூலம் நிவாரணம் அளிக்க இந்த இயந்திரங்கள் பெரும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.