கோலாலம்பூர், ஜன. 17-
நாட்டின் பிரதமராகுவதற்கு பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ள வேளையில் பிரமராகுவதற்கு தகுதியே இல்லாதவர் ஹாடி அவாங் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஓர் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு பிரதமராகுவதற்குகூட ஹாடி அவாங்கிற்கு தகுதியில்லை என்ற பட்சத்தில் நாட்டிற்கு பிரதமராக வருவதற்கு அந்த மதவாத கட்சித் தலைவர் முன்மொழியப்பட்டு இருப்பது வியப்பளிக்கிறது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட்
ஸர்காசி தெரிவித்துள்ளார்.
தோற்றம், பேச்சு, ஆளுமை என பன்முக ஆற்றலை கொண்ட ஹாடி அவாங், நாட்டின் பிரதமராகுவதற்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் உலமா உச்சமன்ற உறுப்பினர் உஸ்தாஸ் மொக்தார் செனிக் நேற்று கோரிக்கை விடுத்து இருப்பது தொடர்பில் புவாட்
ஸர்காசி எதிர்வினையாற்றினார்.
நாட்டில் ஓர் இஸ்லாமிய அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும் அதற்குகூட பிரதமராகுவதற்கு ஹாடி அவாங்கிற்கு தகுதி கிடையாது. ஒரு நிலையான கொள்கையின்றி, அடிக்கடி மாற்றம் செய்யக்கூடிய பத்பவாவை வெளியிடும் ஹடி அவாங்கினால் எவ்வாறு ஒரு நிலையான அரசை உருவாக்க முடியும் என்று புவாட் ஸர்காசி கேள்வி எழுப்பினார்.
பாஸ் தலைவரின் உறுதியற்ற செயல்பாட்டினால் முபாகாட் நேஷனல் தோல்வி அடைந்தது என்பதை மக்கள் மறக்கவில்லை. இந்நிலையில் பிரதமராக வர முடியும் என்று ஹடி அவாங் மனப்பால் குடிக்க வேண்டாம் என்று அந்த அம்னோ தலைவர் கேட்டுக்கொண்டார்.