கோலாலம்பூர், ஜன. 18-
மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அல்தான்துயா ஷரிபுவை கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரச மலேசிய போலீஸ் படையின் முன்னாள் அதிரடி போலீஸ் அதிகாரி சிருல் அஸார் உமாருக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரபுடீன் இட்ரிஸ் ஷா , பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மாட்பெட் அமைப்பு முறையீடு செய்துள்ளது.
மரணத் தண்டனை மற்றும் சித்ரவதைக்கு எதிராக மலேசியர்களுக்கு குரல் கொடுக்கும் ஓர் அரசாங்க சார்பற்ற அமைப்பான மாட்பெட், சட்ட ரீதியாக சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் 8 ஆவது பிரிவிற்கு ஏற்ப தங்கள் கோரிக்கையை சிலாங்கூர் சுல்தான் பரிசீலிக்க வேண்டும் என்று அதன் பேச்சாளர் சார்ல்ஸ் ஹெக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிருலுடன் கூட்டுச் சேர்ந்த இந்த படுகொலையை செய்த மற்றொரு முன்னாள் போலீஸ் அதிகாரியான அஸிலா ஹட்ரிக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை, 40 ஆண்டு கால சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
அதே போன்று தற்போது மரணத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சிருலுக்கும் சிறைத் தண்டனையாக மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், சிலாங்கூர் மந்திரி பெசாரும், சட்டத்துறைத் தலைவரும், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று சார்ல்ஸ் ஹெக்டர் வலியுறுத்தியுள்ளார்.