செபராங் பிறை, ஜன. 18-
பினாங்கு, செபராங் பிறை, பிறை தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த நாடா தயாரிக்கும் தொழிற்சாலை, நேற்று மாலையில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் அழிந்தது. தீ நாலாபுறமும் சூழ்ந்துக்கொண்ட நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு இருந்த 85 தொழிலாளர்கள், எவ்வித காயமின்றி உயிர்தப்பினர்.
இச்சம்பவம் மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்ததாக அத்தொழிற்சாலையின் மனித வளப்பிரிவு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
தீ ஏற்பட்ட அடுத்த கணமே அனைத்து தொழிலாளர்களும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தீ விபத்து குறித்து மாலை 4.42 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை மையம் தெரிவித்தது.
தீயை அணைக்கும் பணியில் 7 நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டதாக அந்த மையம் கூறியது.