கோலாலம்பூர், ஜன. 18-
இந்திய தொழில் முனைவர்களை பலப்படுத்துவதிலும், வளப்படுத்துவதிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள முதன்மை நோக்கங்களை வெற்றியடை செய்வதில் மடானி அரசாங்கம் எப்போதுமே உறுதிப்பூண்டுள்ளது என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டிலிருந்து இந்திய தொழில் முனைவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வந்தாலும் அதன் வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடான தெக்குன் – ஸ்பூமி வாயியாக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்திய தொழில் முனைவர்கள், தங்களின் வர்த்தகங்களை மேம்படுத்திக்கொள்வதை உறுதி செய்வதற்கு எங்களின் மற்றொரு வியூகத்திட்ட முயற்சியாக இது அமைந்துள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், இந்திய தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெக்குன் நேஷனல் மூலம் 30 மிமில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளார்.
தவிர நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோருக்கு ஆதரவாக மேலும் கூடுதல் நிதியாக 70 மில்லியன் ரிங்கிட்டை தெக்குன் நேஷனலுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார் என்று டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.
வழக்கம் போல், இந்த நிதியை விநியோகிக்கும் செயல்முறையை நான் கண்காணிப்பேன். திறன்மிக்க நிதி விநியோக நடைமுறையை நான் உறுதி செய்வேன். அமல்படுத்தப்படும் செயல்முறைகள் யாவும் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக எனது அலுவலகத்தைச் சேர்ந்த குழுவினர், தெக்குன் நேஷனல் தலைமைத்துவத்துடன் மிக அணுக்கமாக பணியாற்றுவர் என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
2007 ஆம் ஆண்டு தெக்குன் நேஷனல் தொடங்கப்பட்ட போதிலும் 26,804 இந்திய தொழில்முனைவோருக்கு 500 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி அளித்ததில் ஸ்பூமியின் சிறந்த சாதனைக்கான அடைவு நிலையாகும்.

2024 ஆம் ஆண்டில், ஸ்பூமி மூலம் மொத்தம் 58.9 மில்லியன் ரிங்கிட் 2,408 இந்திய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2024 ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட ஸ்பூமி கோஸ் பிக் வாயிலாக 287 தொழில்முனைவோருக்கு 12.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது..
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் ஆகியோரின் வலுவான ஆதரவுடன், மடானி அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் புதிய முயற்சிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ரமணன் உறுதி அளித்துள்ளார்.