கோலாலம்பூர், ஜன. 18-
நாளை ஜனவரி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை தி ருத்தல வளாகத்தில் மாபெரும் தேசியப் பொங்கல் விழா மற்றும் இந்திய கலாச்சார மைய திறப்பு விழா ஆகிய இரண்டை விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறன.
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானமும், டத்தோ என். சிவகுமாரை தலைவராக கொண்ட மஹிமா எனப்படும் இந்துக் கோவில்கள் இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்பு பேரவையும் இணைந்து தேசியப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.
தேசியப் பொங்கல் விழாவுடன் பத்துமலைத்திருத்தலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சார மையத்தின் திறப்பு விழாவும் ஒரு சேர இரட்டை விழாவாக நடைபெறும் என்று தேஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய பாரம்பரியத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு அம்சங்களை கொண்டு கட்டப்பட்டு இருக்கும் இந்திய கலாச்சார மையம் காலை 10.30 மணிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவிருக்கிறார்.
இந்நிகழ்வில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்து கொள்வர்.
பிற்பகல் 3 மணிக்கு தேசியப் பொங்கல் விழா தொடங்கும். தமிழர்களின் பாரம்பரியத்தையும், அவர்களின் கலை, கலாச்சார செறிவுகளையும் தாங்கிய பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மலேசியத் தமிழர்களின் மாண்புக்கு பெருமை சேர்க்கும் இந்த இரட்டை விழாக்களில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்விற்கு சிறப்பிக்குமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.