ஜன. 19-
எத்தகைய தடைகள் வந்த போதிலும் / எத்தகைய எதிர்ப்புகளை சந்தித்த போதிலும்/ சமயத்தையும், சமுதாயத்தையும் முன்னிறுத்தி தாம் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளை கைவிடப் போவதில்லை என்று திடமான மன உறுதியுடன், பத்துமலைத் திருத்தலத்தை ஒரு பக்திமலையாக மேம்படுத்துவதில் தம்மை இரண்டறப் பிணைத்துக்கொண்டு, இன்று தன்னிகரற்றத் தலைவராக, வியந்துப் பார்க்கும் நிலையில் உயர்ந்துள்ள கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜாவின் நெஞ்சுரத்தை மஇகாவினர் ஒரு முன்னுதாரணமக கொள்வர் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.
இன்று ஜனவரி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் பத்துமலை திருத்தலத்தில் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா தலைமையில் தேவஸ்தானம் நிர்மாணித்துள்ள இந்திய கலாச்சார மையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்பதற்கு இணங்க யார் எத்தகைய குறைகூறல்களை முன்வைத்தாலும் எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற ஒரே குறிக்கோளை முன்னிறுத்தி, டான்ஸ்ரீ நடராஜா, பத்துமலை திருத்தலத்தில் மேற்கொளண்டுள்ள ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டத்திற்கும், அரசு அளவிலும், பிற இனத்தவர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு வலுத்த போதிலும் தம்முடைய துணிச்சலான முடிவினால் இன்று பத்துமலைத் திருத்தலத்தில் – இந்த புனித தலத்தில் பல்வேறு மேம்பாடுகள் நம்மை மட்டுமல்ல, இங்கு வருகைத் தரும் சுற்றுப்பயணிகளையும் வியக்க வைக்கிறது.
அதற்கு சாட்சியாக விளங்குவது பத்துமலைத்திருத்தலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 140 அடி உயர முருகன் சிலையாகும். இது, டான்ஸ்ரீ நடராஜாவிற்கு நெஞ்சுரத்திற்கு ஓர் சான்றாகும். ஒரு தந்தையைப் போல் எங்களுக்கு ஆலோசகராக இருந்து, வழிகாட்டி வரும் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம் முன்னெடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் மஇகா என்றுமே பக்கபலமாக இருக்கும் என்று பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதில் முதன்மையானது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடமிருந்து மானியம் பெற்றுத் தரப்படும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி மொழி வழங்கினார்.

ஸ்ரீ மகாமரியம்மன் கோவில் தேவஸ்தானமும், மஇகாவும் இணைப்பிலும், பிணைப்பிலும் ஒன்றாகும். மஇகாவின் தோற்றம் ஸ்ரீ மகாமாரியமன் மடியில் என்று மூத்தத் தலைவர்கள் சொல்வதுண்டு. ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் தோற்றம் கண்ட மஇகா, இன்று 500 மில்லியன் ரிங்கிட் செலவில் மாபெரும் கட்டடத்தை எழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது போல டான்ஸ்ரீ நடராஜாவின் பெரும் முயற்சியில் பத்துமலைத் திருத்தலத்தில் இந்திய கலச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சமயத்தினால் மட்டுமே நமது கலை, கலாச்சாரங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல முடியும், அதனால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக சமயத்துடன் நமது கலை கலாச்சாரங்களும் வாழ்ந்து கொண்டு கொண்டு இருக்கிறன.
அந்த வகையில் உடலில் பலம் குறைந்த நிலையிலும் தமது இறுதி மூச்சு வரை சமுதாயத்திற்காவும் சமயத்திற்காகவும் பாடுபடப் போவதாக உறுதி பூண்டுள்ள டான்ஸ்ரீ நடராஜாவின் சீரியப்பணியை மஇகா, போற்றிப் பாராட்டுவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது உரையில் விவரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், பத்துமலையில் அமைந்துள்ள இந்த இந்திய கலாச்சார மையம், நமது மாணவர்களுக்கு, இளையோர்களுக்கு கல்விக்கு அற்பாட்ட ஓர் அறிவார்ந்த போதனைக் களஞ்சியமாக திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தேவஸ்தானத்தின் அறங்காவரும், மஹிமாவின் தேசியத் தலைவரும், மஇகா தேசியப் பொருளாளருமான டத்தோ என். சிவகுமார், இந்திய தூதரகத்தைச் சேர்ந்த திருமதி விஜயலெட்சுமி உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இத்திறப்பு விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.
பல்வேறு கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும், டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கும் டான்ஸ்ரீ நடராஜா மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.