வீடமைப்புத்துறையின் முதல் கூட்டத்தை நடத்தினார் டத்தோஸ்ரீ சுந்தராஜு

பினாங்கு, ஜன. 21-


2024 ஆம் ஆண்டின் பணி செயல்திறனை மதிப்பிடுவதற்கும், 2025 ஆம் ஆண்டிற்கான “முக்கிய செயல்திறன் குறியீடு” –கே.பி.ஐ.க்களை அமைப்பதற்கும் பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்தில் தமது குழுவினருடன் ஒரு சிறிய சந்திப்பை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு நடத்தியுள்ளார்.

பினாங்கு மாநில வீடமைப்புத்துறைக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் சிறந்த சேவை வழங்கலை உறுதி செய்வதற்கு மேம்படுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமாக, பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தில் தமது குழுவின் ஒத்துழைப்பு மற்றும் நல்லாதரவின் விளைவாக பல நேர்மறையான முன்னேற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதில் தாம் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு முழுவதும் பணி செயல்திறன் அறிக்கையை மக்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக சுந்தராஜு தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு முழுவதும் வாங்கத்தக்க மொத்தம் 4,835 மலிவு விலை வீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1,322 வீடுகள் A பட்டியலிலும், 669 வீடுகள் B பட்டியலிலும் 2,844 வீடுகள் C பட்டியலிலும் வழங்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு முழுவதும் 91 பராமரிப்புப் பணிகளுக்கு நிதியளிக்க பினாங்கு அரசு அதிகபட்சம் 80 பராமரிப்பு நிதி மூலம் மொத்தம் ஒரு கோடியே 73 லட்சத்து 38 ஆயிரத்து 338 ரிங்கிட் 50 காசு ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளது.

பினாங்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் வாங்கத்தக்க வீட்டுடைமைத் திட்டத்தில் A வகை, C1 வகை மற்றும் C3 வகை ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 14 மலிவு விலை வீட்டுவசதி திட்டங்கள், அடிப்படை விற்பனை விலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் 2025 ஆம் ஆண்டில் பினாங்குவாசிகளுக்கு 6,583 மலிவு விலை வீடுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS